15 அக்டோபர் 2011

அணுமின் திட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வலுவான வழக்கு!

புதுடெல்லி கூடங்குளம் உள்ளிட்ட புதிய அணு மின் திட்டங்களை ரத்து செய்யக் கோரி, முன்னாள் அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் ஒன்றிணைந்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளனர்.

கூடங்குளம் அணு மின் நிலையப் பணிகளை நிறுத்தக் கோரி மேற்கொள்ளப்பட்டு வரும் மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுவாகி வருகிறது.

இந்த நிலையில், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி, பிரதமரின் முன்னாள் செயலாளர் கே.ஆர்.வேணுகோபால், மத்திய அமைச்சரவை முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம், கடற்படை முன்னாள் தலைமை தளபதி எல்.ராமதாஸ், அணு விஞ்ஞானி பி.எம்.பார்கவா, பிரபல வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷணின் பொதுநல வழக்குகளுக்கான மையம் உள்பட 14 பேர் தாக்கல் செய்துள்ள மனுவின் விவரம்:

நாட்டில் தற்போது இயங்கிவரும் அணு மின் நிலையங்கள் மற்றும் பணிகள் தொடங்கப்படவுள்ள அணு மின் நிலையங்களை, தன்னிச்சையான அரசு சாராத நிபுணர் குழுவை நியமித்து, அந்தக் குழு மூலமாகவோ அல்லது அந்தக் குழுவின் நேரடி மேற்பார்வையிலோ, அனைத்து அணுமின் நிலையங்கள் உரிய பாதுகாப்பாக உள்ளனவா? என்று முறையாக ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக, அந்தந்தப் பகுதி மக்களிடம் அர்த்தமுள்ள சரியான கருத்து கணிப்புகள் நடத்தி, பின்னர் அவை இயங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

மாற்று எரிசக்தியுடன் ஒப்பிடும்போது அணுசக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தின் சிக்கனத் தன்மை குறித்தும் ஆய்வு நடத்தவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இந்த அனைத்து நடவடிக்கைகளும் முடியும் வரை, கூடங்குளம் உள்ளிட்ட அணு உலைகளை திறக்க தடை விதிக்க வேண்டும். இந்தப் புதிய அணு மின் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.

இந்திய மக்கள் நலனுக்கு எதிராக உள்ள சிவில் அணுசக்தி விபத்து இழப்பீடு சட்டம் 2010-ஐ சட்டவிரோதமானது என அறிவித்து, அணு விபத்து நடந்தால், அணுசக்தி நிலையங்களை நடத்துவோரும், விநியோகஸ்தர்களும் முழுமையாகப் பொறுப்பாக்க வேண்டும்.

அணு மின் திட்டங்களில் இதுவரை அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையே நடந்துள்ள ஒப்பந்தங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

அத்துடன், எதிர்காலத்தில் நடக்கும் அணுசக்தி உலைகளை வாங்குவதற்கான ஒப்பந்தங்களையும், அது தொடர்பான தொழில்நுட்பங்களையும் வெளிப்படையாக அறிவிக்க உத்தரவிட வேண்டும்,’ என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

மேலும், ஜப்பானின் ஃபுகுஷிமாவில் ஏற்பட்ட அணுமின் நிலைய விபத்துக்குப் பிறகு, ஜெர்மனி, இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் அணுமின் சக்திக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில், இந்திய அணுமின் நிலையங்கள் 101 சதவீதம் பாதுகாப்பானதாக உள்ளது என இந்திய அணுசக்தி துறை செயலர் அறிவித்திருப்பது, மக்களை திசை திருப்பும் செயல்,’ என்றும் மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டால், அதுவே அணு மின் நிலைய விவகாரத்தில் மத்திய அரசு புதிய நெருக்கடி ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.


நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக