கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 பிப்ரவரி 2012

உனக்காக எப்போது நீ அழப் போகிறாய் ?

மனோயிச்சைகளுக்கு முன்னால் மண்டியிட்டு - நீ 
பாவங்களுக்கு முன்னால் பலவீனப்பட்டு நிற்கும்போதா ?

தவறை கண்ணெதிரே கண்டும்
தட்டிக் கேட்க தைரியம் இல்லாதபோதா ?

நல்லறங்களின் நன்மை அறியாமல் - அவற்றை
நகைப்புக்குரியதாய் நீ பார்க்கும்போதா ?

குர்ஆன் ஓதக்கேட்டும் அழுகை வராமல் - கேளிக்கையின்
கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக கண்ணீர் விடும்போதா ?

அறச்செயல்களில் ஆர்வம் கொள்ளாமல் - அழியப்போகும்
அற்ப இன்பத்தை நாடி நீ ஒடும்போதா ?

வணக்கமாகத் தெரிந்த வழிபாடுகள் எல்லாம் - உனக்கு
வழக்கமான சடங்குகளாக மாறும்போதா ?

சுகம் தந்த வழிபாடுகள் யாவும் - உனக்கு
சுமையாகத் தெரியும்போதா ?

இன்னல்கள் நீங்க இரவின் பின்னேரம் (தஹஜ்ஜுத் நேரம் ) இருந்தும்
பகல் முழுவதும் நீ துக்கத்தால் துடிக்கும்போதா ?

பொன்னான பொழுதுகள் வீனாகிப்போனதே என்று - நீ
வருந்தாமல் வாளாவிருக்கும்போதா?

ஆயுளின் விளிம்பில் நீ அசைந்து கொண்டிரும்போது
பாதை மாறி விட்டதை எண்ணி வருந்தும்போதா ?

அழு ! மீழு !! உன் அழுகையும் புலம்பலும் - அல்லாஹ்வின்
அர்ஷை தட்டும் வரை அழு !!!

இன்னமும் தௌபாவின் வாசல் திறந்தே இருக்கிறது - உன்
உயிர் உனது தொண்டை வாசலை அடையாதவரை !

உனக்காக எப்போது நீ அழப் போகிறாய் ?

- அரபி கவிதை ஒன்றின் தமிழாக்கம்

14 மார்ச் 2011

ஆளப் பிறந்த கூட்டமா...? இல்லை... அடங்கி வாழப் பிறந்த கூட்டமா?

அரசியல் என்பது பணம் பதவி பண்ண உத்தி
மக்களைப் பிரிப்பது தான் அவர்கள் புத்தி
மார்கக்கல்வி உலகக்கல்வி இவையிரண்டையும்
பற்றி நிற்பதில் தான் முஸ்லிம்களே நமது சக்தி
வேண்டாம் முஸ்லிம் அரசியல்கட்சிகள் என்ற சகதி
இல்லையென்றால் இறுதி நாளின் இறைவன் முன்
இஸ்லாத்தை உடைத்தவர்கள் அணியில் நிற்பது உறுதி
ஆளப் பிறந்த கூட்டமா இல்லை
அடங்கி வாழப் பிறந்த கூட்டமா
எழப் பிறந்த கூட்டமா இல்லை
அழப் பிறந்த கூட்டமா
வாழப் பிறந்த கூட்டமா இல்லை
வீழப் பிறந்த கூட்டமா
வேதத்தைப் பற்றிக் கொள்ளுங்கள்
என்றான் இறைவன் இவர்கள்
பேதத்தைப் பற்றிக் கொள்கிறாகள்
மார்க்கத்தைப் பேணுங்கள் என்றால்
மூர்க்கத்தைப் பேணுகிறார்கள்
ஒட்டிக் கொண்டு வாழுங்கள் என்றால்

01 மார்ச் 2011

மன ஊனமில்லா மணமகன் தேவை

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

மன ஊனமில்லா மணமகன் தேவை
...
‘’பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்!’’
(அல்குர்ஆன் : 4:4)

வல்ல அல்லாஹ் மணமகளுக்கு

மஹர் கொடுத்து மணமுடி என்று சொல்ல

நீ கொடுக்க வேண்டிய மஹரை

பெண்ணான என்னிடம் கேட்க

நீ கேட்ட மஹரை கொடுக்க

என் தந்தையோ இன்னும் பாலை வெயிலில்

தன் அனைத்து சுகங்களையும் இழந்து!



என்னைப் பார்க்க வந்த

உன் தாயும், உன் சகோதரியும்

பெண்ணுக்கு என்ன கொடுப்பீர்கள்

என்றவுடன் என் தாயோ நடுக்கத்துடன்

வெளிறிய பார்வையுடன் என்னை பார்த்து

எங்களால் ஆனதை கொடுப்போம் என்கிறார்

நீங்கள் தெளிவாக சொன்னால்தான்

அடுத்த பேச்சுகளை தொடங்குவோம்!

03 நவம்பர் 2010

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பும்!முஸ்லிம் சமுதாயமும்!

இந்திய தேசத்தின் தீர்ப்பா?
இல்லை!
இந்துத்துவத்தின் மீதான ஈர்ப்பு!

புராணங்களும் புரட்டுக்களும் ஆதாரமாம்!
அந்தோ!!
வரலாற்றுக்கு நேர்ந்தது அவமானம்!

சரிசம பங்கீடாம்!
இது கரிசனமா?
இல்லை களவாணித்தனமா?

அரசியல் சாசனத்தின் கல்லறை மீது
அரியாசனம் போட்டு அமர்ந்துள்ளது
ஹிந்துத்துவா பாசிசம்!

கட்டப்பஞ்சாயத்து தீர்ப்புக்கு
கட்டுப்படவேண்டும் என
கட்டளையிடுகிறது
கபோதிகள் கூட்டம்!

சமரசம் என்ற போர்வையில்
சங்க்பரிவாருக்கு
சாமரம் வீசத்துணிந்துள்ளனர்
சமுதாயத்துரோகிகள் சிலர்!

சலசலப்புக்கு அஞ்சுவதும்
சண்டாளர்களுக்கு சல்யூட் அடிப்பதும்
சரித்திர நாயகர்களின் பண்பல்ல!

கதிகலங்கவில்லை கர்ம வீரர்கள்!
அவர்கள்
காத்திருப்பது களமிறங்கத்தான்!

எங்களின் மயான அமைதிக்கு
கோழைத்தனம் என்பது பொருளல்ல!
குமுறும் எரிமலை நாங்கள்!

அக்னி பிழம்பாய்!
சுழன்று வீசும் சூறாவளியாய்!
கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளமாய்!
சுட்டெரிக்கும் சூரியனாய்!
கிளர்ந்தெழுவோம் ஒருநாள்!

எங்களின்
உணர்ச்சிகள் என்றென்றும்
உருக்குலையாது!

-ஆயிஷா மைந்தன்

24 அக்டோபர் 2010

வளைக்குடா


அஸ்ஸலாமு அலைக்கும்,

குருவியாய் திரிந்தோம்
அருவியாய் சிரித்தோம்;
இடியே விழுந்தாலும்
அடிவயிறு குழுங்கச் சிரிப்போம்!

வம்பு என்றால்
கம்புடன் நிற்போம்;
தெம்புடன் இருந்ததால்
திமிருடனே இருப்போம்!

கூட்டமாய் இருந்த நாமோ
ஆளுக்கொருக் கூட்டை நோக்கி
பறந்தோம்;
ஆளுக்கொருக் கூடுக்கட்ட
உழைத்தோம்!

நாட்டைவிட்டு நகர்ந்த நாமோ
நாதியற்று கிடந்தோம்;
மாற்றாரிடம் சொல்லி சிரிக்கும்போது
உன் கதை மெல்ல திறக்கும்;
உன் புகழ் கொடிக்கட்டி பறக்கும்!

என்றாவது பேசினாலும்
குலுங்கக் குலுங்கச் சிரிப்போம்;
விழுந்து விழிந்து ரசிப்போம்!

பெருநாளுக்கு நாம் எடுத்த
சட்டையோ வண்ணமிழந்துப் போனது;
நம் கன்னமும் குழி விழுந்துப் போனது!

உழைத்து அலுத்து
ஒய்ந்துவிட்டோம்
ஒய்வுக்கால வயதிலே;
நரை விழுந்து கண்ணில்
திரை விழுந்து நீயும் நானும் நாட்டிலே!

இழந்துப் போன
இன்பத்தை அழுதுக்கொண்டே
வடித்துவிட்டோம்;
வடிந்துப்போன வாலிபத்தை
வளைக்குடாவில் தொலைத்துவிட்டோம்!

-யாசர் அரஃபாத்

வரதர்ச்சனை


தடுத்த ஒன்றை
கொடுக்கச் சொல்லிக்
கேட்கிறாய்;
கொடுக்க மறுத்தால்
மணக்க மறுக்கிறாய்!

நீ பட்டம் பெற்றதிற்கு
விலையாய் கூலிக்
கேட்கிறாய் - நான்
கொடுக்காவிட்டால்
எனக்கு பட்டம் கொடுக்கிறாய்!

மணத்திற்கு முன்னே
மடிப்பிச்சைக் 
கேட்கிறாய்;
கொடுத்ததிற்க்குப் பின்னே
அதிகாரம் தொடுக்கிறாய்!

பணம் கொடுத்து உன்னை
மணம் முடிப்பதற்குப்
பெயர் திருமணமா;
இல்லை
பணம் செலுத்திப்
பணிப் புரியும்
தனியார் நிறுவனமா!

13 அக்டோபர் 2010

ஹிஜாப் தரும் சுதந்திரம்!




என்ன பார்க்கிறாய்?
என்னைப் பார்க்கும்போது
என்னில் என்ன பார்க்கிறாய்?

நான் சுதந்திரப் பறவையா?
கட்டுக்கோப்புக்குள் அடங்கியவளா?
இயந்திர உலகில் மாட்டியவளா?

கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்
கண்ணாடியாக என் மேனி தெரியாததாலோ?
கட்டுக்கோப்புடன் நானிருப்பதாலோ?

நாகரீகம் அறியாதவளாக
பிணைக்கப்பட்ட கைதியாக
நான் தெரிகிறேனோ உனக்கு?

05 அக்டோபர் 2010

புர்க்கா....

அஸ்ஸலாமு அலைக்கும்,
 
 
குறைந்துவிட்ட ஆடையால்
கும்மாளக் கொண்டாட்டம் உலகுக்கு;
மறைக்க வேண்டியவையை
மறந்துவிட்டப் பரிதாபம்!
 
அரைகுறை ஆடையில்
எல்லாமே விலகும்;
முன்னேறிவிட்டோமென்று
முரசுக் கொட்டும் உலகம்!
 
போர்திக்கொண்டுப் போகும் எம்
சகோதிரியைக் கண்டு
பொறுக்கவில்லையோ
பொருக்கி உனக்கு!
 
ஒழுங்கான ஆடையில்
உலா வரும் ஒரேச் சமுதாயம்;
படையுடன் வந்து தடைப்போட்டாலும்
நடைப்போடமாட்டோம் வீதியிலே;
மரணம் வந்தாலும்
மானம் காப்போம் தரணியிலே!
 
வரமாட்டோம் ஒருநாளும்
அரைகுறைக்கு – காலமெல்லாம்
கட்டுப்படுவோம் இறைமறைக்கு!!
 
 
-யாசர் அரஃபாத்

31 ஆகஸ்ட் 2010

வெத்து வேட்டாய் இருப்பதை விட...

கொலை வெறியோடு
களை எடுப்பதாக எண்ணி
எங்களை நோக்கி ஒரு கூட்டம்!

உலக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்
பாதிக்க பட்டவரே பயங்கரவாதியாக !!
வெறிகொண்ட கூட்டத்தின் நடுவே
பறிக்கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு அபலை சமுதாயம்!!

இல்லாமல் ஆக்க; இருக்க வேண்டிய முதல் அடையாளம்
இஸ்லாமியனாக இருப்பது!!

நம் பலம் படுத்தப் படுக்கையாகி விட்டதால்
வருபவனெல்லாம் கால் துடைத்து விட்டுச் செல்லும் மிதியடியாக!!

அமைப்பு என்கின்ற பெயரிலே
ஆளுக்கொரு மூலையிலே!!

வருடத்திற்கு ஒருமுறை மட்டும் நம் துடிப்பு
மறக்க முடியாத நாள் பாபரி இடிப்பு!!

செத்துப்போன சுயமரியாதையை மீட்டெடுப்பது எப்போது;
வெத்து வேட்டாய் இருப்பதை விட
வெடித்து விடுவதே சிறப்பு!!

மாநபியின் போதனைகள்
வாயோடு நின்றதினால் வந்த வினை;
உருக்கி உள்ளத்தில் விட்டால் உயரும் நம் நிலை!!! (இன்ஷா அல்லாஹ்)
கவிதை:யாசர் அரஃபாத்

வருமடா எங்களுக்கு வசந்த காலம்

நித்தம் நித்தம் ஒரே சப்தம்!
எப்போதுமே வெடி விளக்கால்
பிரகாசமாய் இருக்கும் நாடு !

அகதிகளாய் வந்தவர்களை
அரவணைக்கத்தான் அன்பளிப்பாக
அவர்களுக்கே அகதிகள் முகாம்!

எல்லா குழந்தைகளும் தாய் பாலுக்கு அழுவும்போது
அங்கே மட்டும் குழந்தை தாய்க்காக அழுகின்றன !

கலங்கித்தான் போவான் ராணுவ வீரனும்,
அணு ஆயுத பீரங்கி முன்னே
அசராமல் கற்களை கொண்டு எறியும் ஒரு கூட்டம்!

சின்ன குழந்தைகளும் கற்களைக் தூக்கிக் கொண்டு
களத்திற்கு செல்கின்றன! - மடையர்கள் இவர்களுகென்னத் தெரியும்
மார்க்கம் எங்களுக்கு எவ்வாறு போதிக்கப் பட்டுள்ளது என்று!!

வருமடா எங்களுக்கு வசந்த காலம் - தகவலை
தந்துவிட்டுத்தான் சென்று இருக்கிறார் எங்கள்
தலைவர்!!!

காலம் வரும்,- கல்லும் ,மரமும்
சாட்சி சொல்லுமடா என் பின்னே ஒரு கயவன் உண்டு என்று!!

அப்போது உன் குரல் வலையை அறுக்க வேண்டுமடா
என் பிள்ளை... அதற்காகத்தான் ஓடுகிறேன்
என் மழலையை தூக்கிக் கொண்டு!!!!

கவிதை- யாசர் அராபத்

காலம் ரொம்பவும் மாறிப்போச்சு

காலம் ரொம்ப மாறிப்போச்சு
ஆமாம், ரொம்பவும் நாறித்தான் போச்சு
அம்மிக்கல் ஆட ஆட்டுரல் நின்றது அன்று
ஆட்டுரல் ஆட அம்மிக்கல் நிற்கிறது இன்று
காலம் ரொம்ப மாறிப்போச்சுஆமாம்,
ரொம்பவும் நாறித்தான் போச்சு
ஆற்றங்கரையை சுற்றியோரல்லாம்
ஹைடக் சன்னியாசிகளாக
கழனியில் கிடந்தவர்களெல்லாம்
கார்ப்பரேட் சாமியார்களாக
காலம் ரொம்ப மாறிப்போச்சு ஆமாம்,
ரொம்பவும் நாறித்தான் போச்சு
இழி பிறவிகளெல்லாம் துறவிகளாக
ஆசாமிகளெல்லாம் சாமிகளாக

காலம் ரொம்ப மாறிப்போச்சு ஆமாம்,
ரொம்பவும் நாறித்தான் போச்சு
வனவாசம் சென்றவர்கள்
சகவாசம் தேடுகிறார்கள்
’ஆசி’யை வழங்கியோரெல்லாம்
’வேசி’த்தனம் புரிகிறார்கள்
காலம் ரொம்ப மாறிப்போச்சு
ஆமாம், ரொம்பவும் நாறித்தான் போச்சு
அருளை வேண்டியவர்கள்
பொருளை கேட்கிறார்கள்
ஆசையைத் துறந்தவர்கள்
காசை கறக்கிறார்கள்
காலம் ரொம்ப மாறிப்போச்சு
ஆமாம், ரொம்பவும் நாறித்தான் போச்சு

அம்பிகளெல்லாம் கம்பியை நீட்டினர்
நம்பியோரெல்லாம் வெம்பிப் போயினர்
மெய்ஞானமெல்லாம் பொய்ஞானம் தானோ
இப்போ பாவிகளெல்லாம் சுவாமிகள் தானா?
காலம் கடந்தாலும் ஞானம் பிறக்குமா?
காலம் ரொம்ப மாறிப்போச்சுஆமாம்,
ரொம்பவும் நாறித்தான் போச்சு
பிரச்சனையும் ஆறிப்போச்சு.

உலக சுகாதார தினம்

விமானத்தில் வீசியெறிந்த குண்டுகள்
இரத்த சகதியாக்கின எம் வீதிகளை

சுதந்திரமாக சுவாசித்த காற்றுக்கூட
சுகாதாரமற்றுப் போனது

சிதறிய துகள்கள் எம் விழிப்படலத்தை
கரும்படலமாக மாற்றியது

வெடி ஓசையின் வேள்வியில்
எம் கேள்விப்புலனும் பறிபோனது

கருவறை கூட கந்தக நிலமானது
சடலங்களின் சங்கமத்தில்
சனநாயகம் மலந்ததாம்

குற்றுயிரும் குருதியுமாய்
உறுப்பிழந்த குழந்தைகள்
இது பிறப்பின் ஊனம் அல்ல
ஏகாதிபத்தியம் எம்மீது
கொண்ட வெறுப்பின் ஈனம்

குடலை அறுக்கும் பசியினால்
குப்பைத்தொட்டியில் நாயுடன்
குடுமிப்பிடி சண்டையிட்டவன்
கிடைத்த உணவை
உண்ண நினைத்தபொழுது உள்ளத்தில்
நிழலாடியது இன்று
உலக சுகாதார தினம் என்று
-ஆயிஷா மைந்தன்

காலம் கடந்து...


உள்ளூரில் விலைப் போவாததால்
வெளி நாட்டில் நான்!

வெள்ளை முடியும் பல் இழிக்க
கலர்ச் சாயம் தேடியது கண்கள்
கறுப்புச் சாயத்தை தவிர்த்து!

முதுமையென
முத்திரையிட்டால்
முடியாது இனி வளைகுடாவில் குப்பைக் கொட்ட!

நரைத்த ரோமங்கள்
விதைத்த நினைவுகளால்
விடுப்புக் கேட்டு விரைந்தேன்
விமான நிலையத்திற்கு!

சிறகுகளோடு பறந்த விமானத்தில்
சிறகுகளே இல்லாமல் நானும் பறந்தேன்!

தொட்டுப் பார்க்க என் மழலை;
முத்தமிட என் மனைவி;
கட்டியணைக்க என் தாய் - எனக்
கட்டாத கோட்டையுடன்
கனவுகளில் நான்!!

முடிந்துவிட்டது எல்லாம் ;
எரிகிற வைக்கோலாய்
முடிந்து விட்டது எல்லாம் உள்ளுக்குள்ளே!

பாசங்களுக்கு பதில் சொல்லாமலே
பயணித்துவிட்டேன்
என் இறுதி இலக்கிற்கு!!

இருக்கின்ற காலத்தை
இழந்துவிட்டேன் கடல் கடந்து;
எல்லாம் முடிந்து உணர்ந்து பயனென்ன
காலம் கடந்து!!!
- யாசர் அரஃபாத்