20 பிப்ரவரி 2012

உனக்காக எப்போது நீ அழப் போகிறாய் ?

மனோயிச்சைகளுக்கு முன்னால் மண்டியிட்டு - நீ 
பாவங்களுக்கு முன்னால் பலவீனப்பட்டு நிற்கும்போதா ?

தவறை கண்ணெதிரே கண்டும்
தட்டிக் கேட்க தைரியம் இல்லாதபோதா ?

நல்லறங்களின் நன்மை அறியாமல் - அவற்றை
நகைப்புக்குரியதாய் நீ பார்க்கும்போதா ?

குர்ஆன் ஓதக்கேட்டும் அழுகை வராமல் - கேளிக்கையின்
கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக கண்ணீர் விடும்போதா ?

அறச்செயல்களில் ஆர்வம் கொள்ளாமல் - அழியப்போகும்
அற்ப இன்பத்தை நாடி நீ ஒடும்போதா ?

வணக்கமாகத் தெரிந்த வழிபாடுகள் எல்லாம் - உனக்கு
வழக்கமான சடங்குகளாக மாறும்போதா ?

சுகம் தந்த வழிபாடுகள் யாவும் - உனக்கு
சுமையாகத் தெரியும்போதா ?

இன்னல்கள் நீங்க இரவின் பின்னேரம் (தஹஜ்ஜுத் நேரம் ) இருந்தும்
பகல் முழுவதும் நீ துக்கத்தால் துடிக்கும்போதா ?

பொன்னான பொழுதுகள் வீனாகிப்போனதே என்று - நீ
வருந்தாமல் வாளாவிருக்கும்போதா?

ஆயுளின் விளிம்பில் நீ அசைந்து கொண்டிரும்போது
பாதை மாறி விட்டதை எண்ணி வருந்தும்போதா ?

அழு ! மீழு !! உன் அழுகையும் புலம்பலும் - அல்லாஹ்வின்
அர்ஷை தட்டும் வரை அழு !!!

இன்னமும் தௌபாவின் வாசல் திறந்தே இருக்கிறது - உன்
உயிர் உனது தொண்டை வாசலை அடையாதவரை !

உனக்காக எப்போது நீ அழப் போகிறாய் ?

- அரபி கவிதை ஒன்றின் தமிழாக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக