05 ஏப்ரல் 2012

ஸ்லீப் ஆப்னியா(sleep apnea)Sleep apnea.
‘ஸ்லீப் ஆப்னியா(sleep apnea)’ இந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு கூடவே இரத்த அழுத்தம், சர்க்கரைப் பாதிப்புகளும் இருந்தால், அவர்கள் முதலில் ஸ்லீப் ஆப்னியா நோயைக் கட்டுப்படுத்த சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகே அவர்களால் ரத்த அழுத்தத்தையும் சர்க்கரையையும் கட்டுப்படுத்த முடியும்!
அது என்ன ஸ்லீப் ஆப்னியா(sleep apnea)?
தூக்கத்தின்போது மூச்சு நின்றுவிடுவது ஸ்லீப் ஆப்னியா(sleep apnea). ஸ்லீப் ஆப்னியா நோயின் முக்கிய அறிகுறி குறட்டை. ஆனால், குறட்டை பிரச்னை இருக்கும் எல்லோருக்கும் ‘ஸ்லீப் ஆப்னியா’ நோய் இருக்கிறது என்று சொல்ல முடியாது.
அப்படி என்றால் இது சாதாரணக் குறட்டையா அல்லது நோய் ஆபத்தைக் குறிக்கும் குறட்டையா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?
‘நல்ல அசதியுடன் ஆழ்ந்த நிலையில் தூங்கும்போது மட்டும் எனக்குக் குறட்டை வருகிறது ’ என்று சிலர் சொல்வார்கள். இந்த ஆழ்நிலைத் தூக்கத்தை ‘ராப்பிட் ஐ மூவ்மென்ட்’ (Rapid Eye Movement – REM) என்கிறோம். சாதாரணத் தூக்கத்தின்போது உடல் தசைகள் தளர்வாக இருக்கும். ஆழ்நிலைத் தூக்கத்தில், வழக்கத்தை விடவும் மிகவும் தளர்ந்த நிலையில் ஓய்வு எடுக்கும். கண்ணின் கருவிழிகள் மட்டும் உள்ளுக்குள் அசைந்தபடி இருக்கும். இதுபோல் ஆழ்ந்து தூங்கும்போது எப்போதாவது குறட்டைச் சத்தம் வருவது சாதாரண விஷயம்தான். இதில், பயப்படும்படியான நோய் அறிகுறி எதுவும் இல்லை. இதேபோல், மூக்கு அடைப்பு, ஜலதோஷத் தொல்லைகளால் ஏற்படும் குறட்டைகளும் தற்காலிகமானப் பிரச்னைகள்தான். எனவே, இதற்கு எல்லாம் தனியாக எந்த சிகிச்சையும் தேவை இல்லை.
சரி, குறட்டைப் பிரச்னையை எப்போது சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும்? குறட்டையின் சப்த அளவு ஒரே சீராக இல்லாமல், அடிக்கடிக் கூடிக் குறைவதோடு சில சமயங்களில், அறவே சப்தமின்றிப் போவதுமான அறிகுறிகள் தென்பட்டால், அதை ஆப்னியா(Apnea) என்று சொல்கிறோம். அதாவது மூச்சின் வழியாக மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனின் அளவு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு கட்டத்தில், முற்றிலுமாகவே தடைபடுகிறது. இந்த நிகழ்வு தூக்கத்தின்போது நடைபெறுவதால், இதனை ‘ஸ்லீப் ஆப்னியா’ என்கிறோம்.
இந்த அறிகுறிகளை எல்லாம் உங்களுடன் இருப்பவர்கள் தெரிவிக்கலாம்; சில சமயங்களில், மூச்சுவிட சிரமப்பட்டு திடுக்கிட்டு எழுவதை நீங்களேகூட உணரலாம். படுக்கையைவிட்டு காலையில் எழுந்திருக்கும் சமயத்தில், நாக்கு வறண்டு தொண்டையோடு ஒட்டிப்போன உணர்வுடன் தாகம் எடுக்கலாம். எவ்வளவு நேரம் தூங்கினாலும்கூட காலையில், புத்துணர்வே இல்லாமல் இருப்பது போன்ற உணர்வும் சிலருக்கு இருக்கும். இதனால், பகல் வேளையிலும் தூங்கி வழிவார்கள். புத்தகம் படிக்கும்போது, டி.வி. பார்க்கும்போது, அலுவலகக் கலந்துரையாடலில் இருக்கும் சமயத்திலும்கூட தூக்கம் இவர்களைப் பாடாய்ப்படுத்தும். இவை எல்லாமே ஆப்னியாவின் அறிகுறிகள்தான். எனவே, உடனடியாக இந்த விஷயத்தில் அக்கறைகொண்டு சிகிச்சை எடுப்பது அவசியம். ஆனால், நடைமுறையில் பலரும் ‘எனக்கு நன்றாகத் தூக்கம் வருகிறதே…. தூங்குவதற்கு நேரம்தான் சரியாகக் கிடைக்கவில்லை’ என்று அறியாமையில் இருக்கிறார்கள்.
அதிகத் தூக்கமும் ஆபத்துதான்!
சரியாகத் தூக்கம் வரவில்லை என்றால் மட்டும்தான் ‘தூக்கப் பிரச்னை’ என்று நினைப்பது தவறு. ‘அதிகமாகத் தூக்கம் வந்தாலும் அது பிரச்னைதான்!’ என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இரவுத் தூக்கத்தின்போது ஸ்லீப் ஆப்னியாவினால், மூளைக்கு சரியான அளவில் ஆக்சிஜன் செல்லாமல் ஏற்படும் பக்கவிளைவுகள் சங்கிலித் தொடராக நீள்கின்றன. இதனால், கோபம், தலைவலி, சக்தி இல்லாமை, மறதி போன்ற பிரச்னைகளோடு தாம்பத்ய ஈடுபாடும் குறைந்துபோகக் கூடும். இன்னும் அழுத்தமாகச் சொல்வதானால், பகலில் வாகனம் ஓட்டுகிற முக்கியமான தருணத்தில்கூட தூக்கம் வரக் கூடிய அபாயமும் உள்ளது. இது மட்டும் அல்ல… ஸ்லீப் ஆப்னியா பிரச்னைக்குச் சரியான சமயத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளாதபோது, ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை என்று அடுத்தடுத்தப் பிரச்னைகளும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
குறட்டையில் இவ்வளவுப் பிரச்னைகள் இருக்கிறதா? என வியப்பவர்கள் உடனே அதற்குரிய சிகிச்சையை விரைந்து செய்யுங்கள்.


நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக