டெல்லி: டெல்லியில் நடந்த கருத்தரங்கில் இந்தியாவுக்கு எதிராக பேசியதாக, எழுத்தாளர் அருந்ததி ராய், காஷ்மீர் பிரிவினைவாத ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர் சையத் அலி ஷா கிலானி ஆகியோர் மீது டெல்லி நீதிமன்ற உத்தரவுப்படி, டெல்லி போலீஸார் தேசதுரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அக்டோபர் 21ம் தேதி டெல்லியில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட கிலானி, அருந்ததி ராய் உள்ளிட்டோர், காஷ்மீர் இந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற வேண்டும். அது ஒன்றுதான் பிரச்சினைக்குத் தீர்வு என்று பேசினர். இது பெரும் சர்ச்சையை எழுப்பியது.
இதையடுத்து அருந்ததி ராய் உள்ளிட்டோர் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. மத்திய அரசும் அதுகுறித்து யோசித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்று மத்திய அரசு கூறி விட்டது.
இதையடுத்து டெல்லி கோர்ட்டில், சுஷில் பண்டிட் என்பவர் ஒரு வழக்குப் பதிவு செய்தார். அதில், கிலானி, அருந்ததி ராய் உள்ளிட்டோர் இந்தியாவுக்கு எதிராக பேசியுள்ளனர். இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிய வேண்டும் என்று பேசியுள்ளனர். இது தேச துரோகப் பேச்சாகும். எனவே அவர்கள் மீது தேசதுரோக வழக்குப் பதிவுசெய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதை விசாரித்த கோர்ட், அனைவர் மீதும் தேசதுரோக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது.
இதையடுத்து அருந்ததி ராய், கிலானி உள்ளிட்ட கருத்தரங்கில் பேசியவர்கள் மீது 124ஏ (பிரிவினைவாதம்), 153ஏ (சமூகத்திற்கிடையே விரோதத்தை உருவாக்குதல்), 153பி (தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவித்தல்), 504 (அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்ளுதல்), 505 (பொய்யான செய்தியை சொல்லுதல், வதந்திகளைப் பரப்பி கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வது, பொது அமைதியை சீர்குலைக்க முயல்வது) ஆகிய பிரிவுகளின் கீழ் டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக கடந்த மாதம் அருந்ததி ராய் மீது வழக்குத் தொடரப்படுமா என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை டெல்லி காவல்துறை எடுக்கும். அருந்தித ராய் பேசியதில் தவறில்லை என்று சட்டப்பிரிவுகளை ஆராய்ந்து டெல்லி காவல்துறையினர் முடிவுக்கு வந்துள்ளனர். அவர்கள் செய்தது சரியே என்று கூறியிருந்தார். இந்த நிலையில் டெல்லி கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து தற்போது அருந்ததி ராய் ஏகப்பட்ட பிரிவுகளின் கீழ் டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக