06 ஏப்ரல் 2011

தேர்தல் கமிஷன் எச்சரிக்கை கள்ளஓட்டு போட்டால் 1 ஆண்டு சிறை

சென்னை : தேர்தலில் கள்ள ஓட்டுப்போட்டால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியுள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கோட்டையில் நேற்று அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் தேர்தல் சம்பந்தமாக துணை தேர்தல் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய ‘பூத் சிலிப்’‘ வழங்கும் பணி இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மீதியுள்ளவர்களுக்கு 2 நாட்கள் கழித்து பூத் சிலிப் வழங்கப்படும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்துவதற்கான, ஓட்டு சீட்டுகள் மாவட்டங்கள் தோறும் அனுப்பப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் முன்னிலையில் இந்த சீட்டுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்படும். தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்னர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குசாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதுவரை 66,231 தபால் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. தேர்தலில் கள்ள ஓட்டுப்போட்டால் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும். தங்கள் பெயரில் கள்ள ஓட்டு போடப்பட்டிருந்தால், வாக்காளர்கள் மீண்டும் வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

வாக்குகளை இழந்த வாக்காளர்கள் ‘49பி’ பிரிவின்படி வாக்களிக்கலாம். அதாவது, அவர்களுக்கு புதிய வாக்குசீட்டு வழங்கப்படும். தகுந்த ஆதாரங்களை காட்டி வாக்காளர்கள் வாக்களிக்கலாம். கேமரா மூலம் கள்ள ஓட்டு போட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் ஓட்டு வாக்கு எண்ணிக்கையின்போது செல்லாததாக அறிவிக்கப்படும்.
மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் வாக்குசாவடிகளில் கண்காணிப்புக்காக ‘லைவ் வெப்கேமரா’ பொருத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் சென்னையில் இருந்தபடி தேர்தல் அதிகாரிகள் கண்காணிப்பார்கள். 5 ஆயிரம் வாக்குசாவடியில் வெறும் கேமரா மட்டும் பொருத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் 10 ஆயிரம் வாக்குசாவடிகளில் வெளிமாநில தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

நேரம் குறைப்பு ஏன்?

கடந்த பென்னாகரம் இடைத்தேர்தலின் போது வாக்குப்பதிவு நேரம் காலை 7 முதல் மாலை 5 மணி வரை என்பது மாற்றப்பட்டு, காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையாக மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. அந்த முறையை தற்போது நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலிலும் பின்பற்றப்படுகிறது. தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறதோ அதுபடிதான் நாங்கள் செயல்படுகிறோம் என்று பிரவீன்குமார் கூறினார்.

வயதானோருக்கு தனி வரிசை

வாக்குசாவடிகளில் வயதானோர் வாக்களிக்க வசதியாக தனி வரிசை அமைக்கப்பட உள்ளது. உடல் ஊனமுற்றோர் நேரடியாக வாக்களிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கண் பார்வையற்றோர் வாக்களிக்க உதவ ஒருவர் உடன் வரலாம் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக