16 மார்ச் 2011

விக்கிலீக்ஸ்:மத்திய அரசை குற்றவாளியாக்கிய இடதுசாரிகள், அமெரிக்காவிற்கு எதிராக வாயைத் திறக்காத பா.ஜ.க

புதுடெல்லி:விக்கிலீக்ஸ் வெளியிட்ட இந்தியா தொடர்பான ஆவணங்கள் குறித்து இடதுசாரிகள், மத்திய அரசை சாடிய பொழுது, அமெரிக்காவிற்கு எதிராக ஒரு வார்த்தைக்கூட பேசாமல் மெளனம் சாதித்தது பாரதீய ஜனதா கட்சி.

மத்திய அரசை தாக்குவதற்கு எவ்வித வாய்ப்புகளையும் பாழாக்காத பா.ஜ.க வினர் மத்திய அரசின் அமெரிக்க சார்புநிலை விக்கிலீக்ஸ் மூலம் வெளியானபொழுது வாய்மூடி மெளனிகளாக இருந்தனர்.

மாநிலங்களைவையில் பா.ஜ.கவின் அமெரிக்க அடிவருடித்தனம் வெளிப்பட்டது.

மத்திய அமைச்சரவையில் அமெரிக்க ஆதரவாளர்களை அமைச்சராக நியமிப்பது உள்பட இந்தியாவின் உள்விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடுகள் குறித்து விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்கள் குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டுமென இடதுசாரி எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அமைச்சர்களை நியமிப்பது பிரதமரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது எனக்கூறி பா.ஜ.க இவ்விவகாரத்தில் தலையிடவில்லை.

சி.பி.எம்மில் பி.ராஜீவ் இவ்விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். சி.பி.எம்மின் பிருந்தா காரட் தலைமையில் இடதுசாரி எம்.பிக்கள் மத்திய அரசு பதிலளிக்க கோரி அமளியில் ஈடுபட்டனர்.

விக்கிலீக்ஸ் வெளிப்படுத்திய தகவல்களில் அமெரிக்க விரோதம் மூலம் பெட்ரோலிய அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மணிசங்கர் அய்யர், அமெரிக்க ஆதரவாளர்களான பிரதமர் அலுவலக அமைச்சக பொறுப்பை வகிக்கும் அஸ்வினி குமார், வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா ஆகியோர் இப்பிரச்சனை மாநிலங்களவையில் நடக்கும் பொழுது அவையிலிருந்தனர். விக்கிலீக்ஸ் விவகாரம் தொடர்பாக பா.ஜ.கவின் தருண்விஜய் பேசுவதற்கு நோட்டீஸ் அளித்திருந்தார். தருண் விஜய் பேச எழுந்தபொழுது பா.ஜ.கவின் துணைத் தலைவர் அவரை வலுக்கட்டாயமாக அமரச்செய்தார்.

கேரளா மற்றும் மேற்குவங்காளத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல்களை முன்வைத்து இடதுசாரிகள் நடத்தும் அரசியல் மோசடி என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. பதில் கூற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது என மாநிலங்களவைத் துணைத் தலைவர் ரஹ்மான்கான் விவாதத்திற்கு அனுமதி வழங்கவில்லை.

செய்தி :-தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக