16 மார்ச் 2011

தனிமைப்படுத்தப்பட்ட பிரதமர்: விக்கிலீக்ஸ் தகவலால் புதுபிரச்னை

புதுடில்லி:"பாகிஸ்தான் விவகாரத்தில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தனது சொந்த அரசாங்கத்தாலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்' என, அமெரிக்க தூதர் திமோதி ரோமர் கூறியதாக, விக்கிலீக்ஸ் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் ராணுவ ரகசியம், வெளியுறவு கொள்கை உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை, கடந்தாண்டு இறுதியில் விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியாவைப் பற்றிய தகவல்களும் வெளியிடப்பட்டன. கடந்த 2009ல், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த எம்.கே.நாராயணனுடன், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி ரோமர் ஆலோசனை நடத்தினார். அப்போது இருவருக்கும் இடையே நடந்த உரையாடல்கள் குறித்த தகவல்களை, திமோதி ரோமர், அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்துக்கு அனுப்பினார். அந்த தகவல், வீக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் திமோதிரோமர் கூறியதாவது:இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனுடன் பேசினேன். அப்போது, பாகிஸ்தான் தொடர்பான விவகாரத்தில், அவருக்கும்,
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் கருத்து வேறுபாடு இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக, தனது கருத்து வேறுபாடுகளை பிரதமரிடம் தெரிவிப்பதற்கும், அவர் தயக்கம் காட்டவில்லை என்றும் தெரியவந்தது. நாராயணன், சோனியா குடும்பத்துக்கு நெருக்கமானவராக கருதப்படுவதால், பிரதமரிடம் தயக்கம் காட்டாமல், தனது கருத்தை தெரிவித்து வருகிறார். பாகிஸ்தானுடனான விவகாரத்தை, பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளலாம் என்பது பிரதமரின் கருத்தாக உள்ளது. ஆனால், நாராயணனுக்கு பேச்சுவார்த்தையில் நம்பிக்கை இல்லை. மொத்தத்தில், பாகிஸ்தான் விவகாரத்தில், பிரதமர் மன்மோகன் சிங், தனது சொந்த அரசாங்கத்தாலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.
இவ்வாறு இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.


மேலும், மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய குற்றவாளியான அஜ்மல் கசாப் குறித்து, உள்துறை அமைச்சர் சிதம்பரம், அமெரிக்காவின் எப்.பி.ஐ., இயக்குனர் ராபர்ட் முல்லருடன் கடந்தாண்டு பேசியது தொடர்பான தகவலையும், விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.


" அஜ்மல் கசாப், தங்கள் நாட்டைச் சேர்ந்தவன் தான் என, பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இருந்தாலும், தூதரகத்தை அணுகுவதற்கு அஜ்மல் கசாபுக்கு அந்த நாட்டு அரசாங்கம் அனுமதி மறுத்து விட்டது'என, கூறியுள்ளார். இந்த தகவலும் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.


விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ள இந்த தகவல்களால், தேசிய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அரசை சார்ந்த அரசு என்று பா.ஜ., எம்.பி.,ஜஸ்வந்த் சிங் நேற்று லோக்சபாவில் விமர்சித்தார். இலங்கை மற்றும் நேபாளம் விஷயத்தில் அக்கறை காட்டவில்லை என்ற அவர் பாகிஸ்தான் விஷயத்தில் இந்த அரசு "சிம்லா ஒப்பந்தத்தைப் பின்பற்றுகிறதா' என்று கேட்டார்.கடந்த 2006ல் ஏற்பட்ட அமைச்சரவை மாற்றம் பற்றி விக்கி லீக்ஸ் தகவல்கள் பொய்யானது என்று காங்கிரஸ் மறுத்தது. பெட்ரோலிய அமைச்சராக மணிசங்கருக்கு பதிலாக அமெரிக்காவுக்கு வேண்டிய தியோரா நியமனம் என்ற தகவலை ஏற்கவில்லை.


விக்கிலீக்ஸ் தகவல் பரபரப்பானது, ஆனால், அறிவுக்கு பொருந்தாதது என்று காங்.,
தகவல் தொடர்பாளர் சிங்வி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக