விழுப்புரம்:விழுப்புரம் மாவட்ட ஐக்கிய ஜமாஅத் பேரவை விழுப்புரம் மாவட்டத்தில் 4 இடங்களில் போட்டியிடப் போவதாகவும், அதில் முதல்கட்டமாக இரண்டு வேட்பாளர்கள் பெயரையும் ஜமாஅத் பேரவைத் தலைவர் எஸ்.எம்.அமீர் அப்பாஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவித்தார்.
இந்த அமைப்பின் நிர்வாகிகள் கூட்டத்துக்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறியது: ‘முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதற்காக கடந்த மக்களவைத் தேர்தலில் முஸ்லிம்கள் வாக்களித்து விட்டனர். இனி என்ன செய்யப் போகிறோம் என்று சொன்னால்தான் எங்கள் ஆதரவு குறித்து தெரிவிப்போம்.
குறிப்பாக இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள இருபெரும் கூட்டணி கட்சிகள், அவர்கள் கட்சி சார்பிலேயே விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு முஸ்லிமாவது நிறுத்தப்பட வேண்டும். அப்படி நிறுத்தும் கட்சிக்கு எங்களின் ஆதரவு உண்டு. இரு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்தால், தொகுதிக்கேற்றவாறு முடிவு செய்து வாக்களிப்போம். இல்லையென்றால் நாங்கள் இந்த மாவட்டத்தில் விழுப்புரம், செஞ்சி, சங்கராபுரம், திருக்கோவிலூர் ஆகிய தொகுதிகளில் ஜமாஅத் சார்பில் போட்டியிடுவது உறுதி. இதில் விழுப்புரம் தொகுதியில் திண்டிவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் இ.சர்வர் கானும், செஞ்சியில் எம்.எச். அப்துல் சலாமும் போட்டியிடுவார்கள்.
அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதியில் நாங்கள் போட்டியிட மாட்டோம்.
எங்களின் இந்தத் தேர்தல் முடிவு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்கும். அது சட்டத்துக்கு உட்பட்ட மாற்று அரசியலாக இருக்கும். முஸ்லிம் லீக் 4 பேருக்கு மட்டும் சொந்தமல்ல, அனைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவானது. திமுக கொடுத்த 3 தொகுதிகளில் ஒன்றை மீண்டும் எடுத்துக் கொண்டது. அதனை திருப்பி வழங்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
பேட்டியின்போது செயலர் கே.எம்.ஷேக்தாவூத், பொருளாளர் எம்.கே.ஷாகுல்ஹமீது, எம்.எச்.அப்துல் சலாம் ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக