12 மார்ச் 2011

கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிடவும் தயார்: தேமுதிகவில் சீட் கேட்கும் 'இப்படிக்கு ரோஸ்'

சென்னை: சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிட திருநங்கை ரோஸ் வெங்கடேசன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்தியாவில் முதல் முதலாக டி.வி. நிகழ்ச்சியை நடத்திய அரவாணி இவராவார். `இப்படிக்கு ரோஸ்' என்ற டி.வி. நிகழ்ச்சி மூலம் மிகப் பிரபலமானார்.

சென்னையில் பிறந்து வளர்ந்து சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பி.இ. படித்துவிட்டு அமெரிக்காவில் எம்.எஸ். பட்டம் முடித்தவர் ரோஸ்.

சென்னை லயோலா கல்லூரியில் டெலிவிஷன் நிகழ்ச்சித் தயாரிப்பு பற்றிய படிப்பையும் முடித்துள்ளார்.

நிருபர்களிடம் அவர் கூறுகையில், சமுதாயத்தில் திருநங்கைகள், பாலியல் சிறுபான்மையினர் ஒதுக்கப்பட்டே இருந்தனர். அவர்கள் தமிழ்நாட்டில் 35 லட்சம் முதல் 75 லட்சம் பேர் உள்ளனர். திருநங்கைகள் மட்டும் 50,000 முதல் 2 லட்சம் பேர் வரை இருப்போம்.

எங்களுக்கும் ஓட்டு வங்கி உள்ளது. சில வருடங்களாக நாங்கள் வெளி உலகுக்கு வந்து போராடியதன் காரணமாக சில உரிமைகளைப் பெற்றுள்ளோம். அரசியலில் திருநங்கைகள் புகும் அளவுக்கு சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசும் திருநங்கைகளுக்கு அடையாள அட்டை வழங்கியது. தமிழ்நாட்டில் 3வது கட்சியாக தேமுதிக விளங்குகிறது. விஜயகாந்த் கட்சி தொடங்கியதில் இருந்து திருநங்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். அவரது முற்போக்கு கொள்கைகளால் நான் ஈர்க்கப்பட்டுள்ளேன்.

இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தேமுதிகவில் மனு கொடுத்துள்ளேன். எனது சமூகப்பணி தொடரவே தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன்.

எனக்கு போட்டியிடவும் அரசியலில் பிரவேசிக்கவும் தகுதி இருக்கிறது. முதலில் நான் இந்திய பிரஜை, அடுத்து நான் தமிழக பிரஜை, 3வதாக தான் நான் ஒரு பெண். 4வது ஆக நான் ஒரு திருநங்கை. என்னை போல திருநங்கை கல்கியும் அரசியலில் சேர்ந்துள்ளதை வரவேற்கிறேன்.

விஜய்காந்த் விரும்பினால் முதல்வர் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிடவும் தயார் என்றார் ரோஸ்.

கலைஞர் தொலைக்காட்சியில் இது ரோஸ் நேரம் என்ற நிகழ்ச்சியையும் சில காலம் நடத்தியவர் ரோஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்தி :-  thastamil 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக