24 ஜனவரி 2011

அச்சத்தில் இலங்கை சிறுபான்மையினர்"


இலங்கையில் போர் முடிவடைந்து சுமார் இரண்டு வருடம் ஆகியுள்ள நிலையிலும், இன்னமும் வடக்கிலும் கிழக்கிலும் வசிக்கும் சிறுபான்மையினரான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒருவித அச்ச சூழலிலேயே வாழ்கின்றனர் என்று கூறும் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

வடபகுதி சிங்களமயமாக்கப்படுகிறது என்கிற அச்சம் நிலவுவதாக அறிக்கை கூறுகிறது


லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும் சிறுபான்மையினர் உரிமை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தக் கருத்து கூறப்பட்டுள்ளது.

வடகிழக்கில் சில மாவட்டங்களில் நான்கு பொதுமக்களுக்கு ஒரு இராணுவத்தினர் என்கிற எண்ணிக்கை நிலவுகிறது என்றும் அப்பகுதிகள் இராணுவமயமாக்கப்பட்டு வருவதாகவும் அந்த அமைப்பின் அறிக்கை கூறுகிறது.


இலங்கை அரசு பொதுவாக ஒரு பெருந்தேசிய இனவாத கொள்கையை நோக்கி போய் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது எனவும் அரசிலிருந்து சிறுபான்மையினர்களான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் விடுபட்டு போயுள்ளது போல தெரிகிறது எனவும் அந்த அமைப்பின் செயல் இயக்குநர் மார்க் லாட்டிமர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இலங்கைக்குள்ளேயே இடம் பெற்ற ஆய்வின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் வடகிழக்கிலுள்ள மக்களிடம் பேசியபோது கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே அங்கு மக்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

அரசு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்

நாட்டில் அனைவருக்கும் இடம் உள்ளது என்கிற நம்பிக்கை அனைவரிடமும் ஏற்படுவதுதான் இலங்கையின் எதிர்காலத்துக்கு நல்லதாக இருக்கும் எனவும் மார்க் லாட்டிமர் சுட்டிக்காட்டுகிறார்.




விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தாம் விடுவிக்கப்பட்டுள்ளோம் என்கிற உணர்வு பெரும்பாலான தமிழர்களிடம் இருந்தாலும், அதனால் ஏற்பட்டுள்ள சமாதானத்தின் பலன்களை அவர்கள் பெறவில்லை என்பதும் காணக் கூடியதாக இருக்கிறது எனவும் மார்க் லாட்டிமர் கருத்து வெளியிடுகிறார்.

வடகிழக்கில் பல இடங்களில் புதிதாக புத்த விகாரைகள் அமைக்கப்படுவதை தாங்கள் கண்டதாக வடக்கு கிழக்கிலுள்ள மக்கள் தமது ஆய்வுக் குழுவினிரிடம் தெரிவித்துள்ளனர் என்று அந்த அமைப்பு கூறுகிறது.

இதன் காரணமாக தமது பகுதிகள் சிங்களமயப்படுத்தப்படுவதாக வடபகுதியிலுள்ள மக்களிடம் எண்ணம் நிலவுகிறது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மக்கள் வேலைக்காகவோ இதர விடயங்களுக்காகவே வடபகுதிக்கு செல்வது பிரச்சினை அல்ல. ஆனால் அரசின் ஒரு கொள்கையாக தென் பகுதி மக்கள் வடகிழக்குப் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவது கவலையளிக்கும் ஒரு விடயம் எனவும் சிறுபான்மையினர் உரிமைகள் அமைப்பின் செயல் இயக்குநர் மார்க் லாட்டிமர் தெரிவித்தார்.

நாட்டின் வடபகுதியில் மக்கள் நடமாடுவதற்கு இராணுவத்தால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் போது, மற்ற பகுதி மக்கள் வடபகுதிக்கு சுதந்திரமாக செல்ல முடியும் என்பதுதான் கேள்விகளை எழுப்புகிறது எனவும் அவர் மேலும் கூறினார்.

பாரபட்சம் இல்லை என அரசு கூறுகிறது

இலங்கையில் எந்த மக்களும் பாரபட்சமாக நடத்தப்படுவதில்லை என்று தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தின் இயக்குநர் லக்ஷமன் ஹுலுகல்ல பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அமைப்பு இலங்கையிலிருந்து செயற்படாத நிலையில், அதற்கு இலங்கை தொடர்பிலான புரிதல் எந்த அளவுக்கு இருக்கும் என்கிற கேள்வியும் உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வடகிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரிய அளவில் வெற்றி பெற்றது, எனவும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்ட கட்சிகள் தற்போது அரசுடன் இணைந்து செயலாற்றி வருகின்றன எனவும் அவர் மேலும் கூறுகிறார்.
நன்றி :http://www.bbc.co.uk/tamil/  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக