சீனப் பட்டாசு
சீனப் புதுவருடம் பிறப்பதற்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், தாய்வான் தலைநகர் தய்பெய்யில், மக்கள் நிஜப் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அவற்றுக்கு பதிலாக பட்டாசு சத்த ஒலிப்பதிவை அவர்கள் ஒலிக்கச் செய்துகொள்ளலாம் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பட்டாசு வெடிப்பதால் திருஷ்டி கழியும் துரதிருஷ்டம் விலகும் என்று நம்பும் சீனர்கள் தமது புத்தாண்டை பட்டாசு கொளுத்தி வரவேற்பதென்பது அவர்களின் நூற்றாண்டுகள் கால பாரம்பரியம் ஆகும்.
ஆனால் ஹாங்காங், மலேஷியா, சிங்கப்பூர் போன்ற மற்ற சீன சமூகங்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடை வந்துவிட்டது.
இருந்தாலும் தாய்வானிலோ பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி இருந்துவருகிறது.
இரண்டு வார கால அதிர் வேட்டுகள்
சந்திரன் அடிப்படையிலான தமது புத்தாண்டை சீனர்களின் இரண்டு வார காலம் கொண்டாடிவருகின்றனர்.
இக்காலப்பகுதி முழுக்க தாய்வான் எந்நேரமும் பட்டாசு சத்தத்தால் அதிர்ந்தபடிதான் இருக்கும்.
பயங்கர சத்தங்களை உண்டாக்கும் அதிர்வேட்டுக்களும் அங்கே பயன்படுத்தப்படுகின்றன. பட்டாசு சத்தத்தில் அக்கம்பக்கத்தில் நின்றிருக்கக்கூடிய கார்களின் எச்சரிக்கை மணிகளும் அலற ஆரம்பித்துவிடும்.
இந்தக் காலகட்டத்தில் பட்டாசு தொல்லை தாள முடியாமல் அந்நாட்டில் வாழும் வெளிநாட்டு மக்கள் பலர் தாய்வானிலிருந்து வெளியேறிவிடுவதும் உண்டு.
சுற்றுச்சூழல் பாதிப்பு
தவிர பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலும் அதிகமாக மாசுபடுகிறது. இந்தக் காலகட்டத்தில் நகரம் முழுக்க புகையும் நெடியும் மூச்சுத் திணறும் அளவுக்கு அதிகமாக இருக்கும். வீதியெல்லாம் சின்னச் சின்னதாய் சிகப்புத் தாள்கள் சிதறிக் குப்பையாய் கிடக்கும்.
இதையெல்லாம் பார்த்துவிட்டுத்தான், பட்டாசு வெடிப்பதற்கு பதிலாக மாற்று யோசனை ஒன்றை தய்பெய் நகர அதிகாரிகள் மக்களிடம் முன்வைத்துள்ளனர்.
பட்டாசு சத்தம் ஒலிப்பதிவு செய்யப்பட்ட சி.டி.களை மக்கள் இலவசமாகப் பெறலாம் அல்லது அரசாங்க இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொண்டு தங்களுடைய குடும்ப விழாக்கள், வர்ததக விழாக்கள் மற்றும் பிற கொண்டாட்டங்களில் அந்த ஒலிப்பதிவை அவர்கள் ஒலிக்கச் செய்துகொள்ளலாம் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆனால் தாய்வான் மக்கள் பலர் தாங்கள் நிஜமான பட்டாசுகளை வெடிப்பதையே விரும்புகின்றனர்.
இந்தியா
இந்தியாவிலும்கூட பட்டாசு கொளுத்தி கொண்டாடக்கூடிய குறிப்பாக தீபாவளி போன்ற நிறைய பண்டிகைகள் இருக்கின்றன.
சுற்றுச்சூழல் மாசுபடுவது, வேட்டுச் சத்தத்தால் பலவீனமானவர்கள் பாதிக்கப்படுவது போன்ற பிரச்சினைகளைத் தாண்டி, பட்டாசு கொளுத்தும்போது பிள்ளைகளுக்கு தீக்காயம் ஏற்படுவது, தீவிபத்துகள் ஏற்பட்டு உயிருக்கும் உடமைகளுக்கும் ஆபத்து உண்டாவது, கால்நடைகள், யானைகள் போன்ற விலங்குகள் அரண்டுபோய் சுற்றியிருப்பவர்களைத் தாக்க ஆரம்பித்துவிடுவது போன்ற வேறு பல கஷ்டங்களும் உருவாவதுண்டு.
இந்தியாவில் அரசாங்கம் இப்படி ஒரு யோசனையை முன்வைத்தால், அதை மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதும் சுவாரஸ்யமான ஒரு விவாதப் பொருளாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக