05 ஏப்ரல் 2012

பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 1654 ஏக்கர் நிலம் வக்ப் வாரியத்திற்கு சொந்தமானது – ஆந்திர உயர்நீதிமன்றம்

ஹைதராபாத்:ஆந்திர அரசால் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 1654 ஏக்கர் நிலம் அனைத்தும் வக்ப் வாரியத்திற்குச் சொந்தமானது என்று ஆந்திர உயர்நீதிமன்றம் கடந்த செவ்வாய் அன்று தீர்ப்பு ஒன்றைக் கூறியுள்ளது.

வக்ப் நிலம் தொடர்பாக அந்நிலத்தை வாங்கிய லான்கோ ஹில்ஸ் நிறுவனமும் மற்றும் இதர பன்னாட்டு நிறுவனங்களும் மனிகொண்டா கிராமத்தில் உள்ள 32,000 கோடி மதிப்பிலான வக்ப் நிலங்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரின அந்த மனுவை உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

வி.வி.எஸ்.ராவ் மற்றும் ஆர்.கண்டா ராவ் அடங்கிய டிவிசன் பெஞ்ச் 1654 ஏக்கர் நிலத்தை தர்கா ஹஜரத் ஹுசைன் ஷா வலி என்கிற வக்ப் வாரியத்திற்கு சொந்தமானது என்றும் அது அரசிற்கு சொந்தமான நிலமல்ல என்றும் தெரிவித்துள்ளது. வக்ப் வாரியத்தின் சார்பாக இந்த வழக்கை நடத்திய மசூத் கான் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் நீதிமன்றம் இதனை தெரிவித்தார்.

முன்னால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு ஆந்திர உள்கட்டமைப்பு வாரியத்தின் கீழ் துபாய் நிறுவனமான ஈமாருக்கு 400 ஏக்கரும், மென்பொருள் நிறுவனங்களான மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 54.79 ஏக்கரும், விப்ரோ நிறுவனத்திற்கு 30 ஏக்கரும், போலாரிஸ் நிறுவனத்திற்கு 7.89 ஏக்கரும் அளித்தது. பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ராஜசேகர ரெட்டியின் அரசு காங்கிரஸ் எம்.பி ஒருவரின் நிறுவனமான லான்கோ ஹில்ஸ் நிறுவனத்திற்கு 108.10 ஏக்கர் நிலத்தை அளித்தது.

அதில் லான்கோ நிறுவனத்தைத் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் தங்களது கட்டுமான பணியை முடித்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசு ஒதுக்கிய அந்த இடங்கள் வக்ப் வாரியத்திற்கு சொந்தமானது என்று கடந்த 2007 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் லான்கோ நிறுவனமும் தாங்கள் அந்த இடத்தை முறையாக அரசிடமிருந்து வாங்கியதாக வாதாடியது. எனினும் உயர்நீதிமன்றம் அனைத்து இடங்களும் வக்ப் வாரியத்திற்கு சொந்தமானது என்று தீர்ப்பு அளித்துள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து வக்ப் வாரியத்தின் தலைவர் சய்யத் குலாம் தெரிவிக்கையில் தாங்கள் இறைவன் அருளால் வெற்றி பெற்றுவிட்டோம் என்றும் மற்றும் நீதிமன்ற தீர்ப்பிற்கு தாங்கள் மதிப்பளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இனி வக்ப் நிலங்களை குறித்து அரசு அதிகாரிகள் விழிப்புடன் இருப்பார்கள் என்றும் இனி அரசு இதுபோல் வக்ப் நிலத்தில் முறைகேடு செய்ய துணியாது என்றும் மசூத் கான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக