20 செப்டம்பர் 2011

கூடங்ளம் விவகாரம்: இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கும் மேதா பட்கர்

கூடங்குளம்: கூடங்குளம் பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் மேதா பட்கர் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனை தொடர்பாக அவர் இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசவிருக்கிறார்.

நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடிந்தகரையில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகளை வலியுறுத்தி 101 பேர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். கூட்டப்புளி, பெருமணல், கூடன்குளம், இடிந்தகரை, கூத்தக்குளி போன்ற பல்வேறு கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று 9-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை.

உவரி, கூடுதாழை, கூட்டபானை, கூத்தன்குழி உள்ளிட்ட மீனவ கிராமங்களில் கஞ்சி தொட்டி திறக்கப்பட்டன. கூடன்குளம் மற்றும் இடிந்தகரையை சுற்றியுள்ள குக்கிராமங்களில் பல்வேறு இடங்களில் கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. நேற்று நடந்த போராட்டத்தில் சமூக ஆர்வலரும், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு தலைவருமான மேதா பட்கர், மதுரை மறை மாவட்ட பேராயர் பீட்டர் பெர்னான்டோ மற்றும் கேரளாவைச் சேர்ந்த பல்வேறு இளைஞர், மகளிர் அமைப்புகள் போராட்டத்தில் பங்கேற்றன.


உண்ணாவிரத பந்தலுக்கு வந்த மேதா பட்கர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது,

கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி கடந்த 9 நாட்களாக போராட்டம நடந்து வருகிறது. பல குற்ற வழக்குகள் உள்ள நரேந்திர மோடி நடத்தும் உண்ணாவிரத போராட்டத்திற்கு அதிமுக கட்சியை சேர்ந்த இரண்டு தோழர்களை ஜெயலலிதா அனுப்பியுள்ளார். ஆனால் இடிந்தகரைக்கு அவர்கள் வரவில்லை. அவர்கள் கட்டாயம் வந்திருக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து மேதா பட்கர் தலைமையில்ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன் பின் அவர் கூறுகையில், முதல்வர் கொடுத்த அறிக்கை முழு திருப்தியை ஏற்படுத்தவில்லை. மத்திய அரசு தான் இதற்கு பொறுப்பு என்ற ரீதியில் அந்த அறிக்கை உள்ளது. இந்த பிரச்சனைக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பு. இடிந்தகரையில் நடக்கும் உண்ணாவிரத போரட்டம் நாடு தழுவிய போராட்டமாக மாறிவிட்டது.

இதனால் இங்கே கூடி முடிவெடுக்க முடியாது. நாளை (20-ம் தேதி) இது தொடர்பாக முதல்வரை சந்திப்பேன். அனைதது கட்சி தலைவர்களிடம் கருத்து கேட்பேன். அதன்படி முடிவெடுப்போம் என்றார்.

இந்த போராட்டத்திற்கு சமுதாய தலைவர்கள், மத தலைவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவர்களை எல்லாம் அழைத்து முடிவெடுப்போம். அதுவரை போராட்டம் தொடரும் என்று போராட்டக்குழு தலைவர் உதயகுமார் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக