19 செப்டம்பர் 2011

மோடியின் உண்ணாவிரத நாடகத்தால் 100 கோடி விரயம்!

"மோடி நடத்தும் உண்ணாவிரத நாடகத்தால் 100 கோடி ரூபாய் விரயமாக்கப்பட்டுள்ளது" என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தி குஜராத் முதல்வர் மோடி இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்நிலையில், அவர் நடத்தும் உண்ணாவிரதம் ஒரு நாடகம் என்றும் அதனால் 100 கோடி ரூபாய் விரயமாக்கப்பட்டுள்ளது என்றும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக குஜராத் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் மோகன் பிரகாஷ் கூறும்போது, "மோடியின் தற்போதைய நாடகத்தால் குஜராத்தியர்களின் 100 கோடி ரூபாய் விரயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் அமைதி, நல்லிணக்கத்தையும் பாதிக்கச் செய்துள்ளது" என்று தெரிவித்தார்.

நரேந்திர மோடியின் உண்ணாவிரதம் குறித்து பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைப்பாளரும் ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத்யாதவ் கூறும்போது, "70 முதல் 80 சதவீத மக்கள் தினமும் ரூ.20 மட்டுமே கொண்டு வாழ்கிறார்கள். 80 சதவீத மக்கள் தினமும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் தினமும் அரை நாளோ அல்லது முழு நாளோ உண்ண முடியாமல் உள்ளனர். இவர்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆனால் தனிநபரின் உண்ணாவிரதங்கள் விவாதிக்கப்படுகின்றன" என்று தெரிவித்திருந்தார்.

சரத்யாதவின் இக்கருத்தைச் சுட்டிக்காட்டிய மோகன் பிரகாஷ், "சரத்யாதவ் ஐக்கிய ஜனதாதளத் தலைவர் மட்டும் அல்ல; தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைப்பாளரும் அவர்தான். அமைப்பாளரே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார் என்பது அந்தக் கூட்டணியில் விரிசல் ஏற்படத் தொடங்கியுள்ளது என்பதைக் காட்டுகிறது" எனவும் கூறினார்.

நன்றி (செய்தி ) :-இந்நேரம்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக