02 ஏப்ரல் 2011

ஐவரிகோஸ்டில் கடும் மோதல்

ஐவரிகோஸ்டில் கடுமையான மோதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் அங்கு நடந்த தேர்தலில் வெற்றிபெற்றதாக சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிபர் அலசேன் ஒட்டாரா அவர்களின் படைகள், அந்த தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளாத முன்னாள் அதிபரான லாரண்ட் பாக்பூ அவர்களுக்கு விசுவாசமான படைகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.

தற்போது அங்கிருந்து வரும் தகவல்களின்படி பாக்போ அவர்களுக்கு ஆதரவான படைகள் மிகவும் மோசமாகப் பின்வாங்கிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

அவரது படையில் இருந்த பலர், ஒன்றில் ஆயுதங்களை கைவிட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர் அல்லது ஒட்டாராவின் படைகளுடன் சேர்ந்து விட்டனர் என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

கடந்த நவம்பர் மாதமளவில் நாடு முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த லாரண்ட் பக்போவின் படைகள் தற்போது அவரது வதிவிடம் இருக்கும் நிர்வாகத் தலைநகரான அபிஜானின் மிகவும் சொற்ப இடத்தை மாத்திரமே தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.


அங்கிருந்து 240 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் வணிகத் தலைநகரான யொமொசொக்குறா நகர் நான்கு நாட்களுக்கு முன்னதாக எதிர்ப்பு எதுவும் இன்றியே ஒட்டாராவின் படைகளின் வசம் விழுந்து விட்டது.

அபிஜானில் உள்ள அதிபர் மாளிகையை சுற்றவர பல இடங்களில் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டவண்ணம் உள்ளன.

அங்குள்ள சரியான நிலைமைகள் தெரியாவிட்டாலும், அதிகாரத்துக்கான போராட்டத்தின் ஒரு முக்கிய மையமாகத் திகழுகின்ற அரசாங்க தொலைக்காட்சி நிலையத்தை தாம் கைப்பற்றி விட்டதாக ஒட்டாராவின் படைகள் கூறுகின்றன.

தலைநகரில் உள்ள நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் அங்கிருக்கின்ற பிரஞ்சுப் படைகளின் பாதுகாப்பில் இருக்கின்றனர். ஏனைய வெளிநாட்டவர்கள் தமது வீடுகளிலேயே இருக்குமாறு எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதற்கிடையே சர்வதேச அங்கீகாரத்தை பெற்றிருக்கின்ற ஒட்டாராவுக்கு ஆதரவான படைகள் அங்கு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஐநாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

அங்கு பல இடங்களிலும் சூறையாடல்களும், வன்செயல்களும் தொடர்வதாக செய்திகள் கூறுகின்றன. களநிலவரம் இன்னமும் தெளிவாகத் தெரியவில்லையாயினும், பாக்போ அவர்களுக்கு ஆதரவான படைகள் பின்வாங்கி வருவதாகவே கூறப்படுகிறது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம்.

ஒருவேளை சர்வதேச ஆதரவைப் பெற்ற அலசேன் ஒட்டாரா இதில் வெற்றி பெற்றாலும் அங்கு நல்லிணக்கத்துக்கான அவசியமே முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்று ஐநாவுக்கான பிரஞ்சு தூதுவர் கூறியுள்ளார்.

நன்றி (செய்தி ) :-  bbc தமிழோசை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக