10 ஏப்ரல் 2011

அரபு நாடுகளில் போராட்டங்களுக்கு ஓய்வில்லை

டமாஸ்கஸ்/கெய்ரோ/ஸன்ஆ:சிரியாவில் சர்வாதிகார அதிபர் பஸ்ஸார் அல் ஆஸாதிற்கு எதிராக பல வாரங்களாக தொடரும் போராட்டம் ஓயவில்லை. எதிர்ப்பாளர்கள் மீது ராணுவம் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 30க்கும் அதிகமான பேர் கொல்லப்பட்டனர். இதில் 10 பேர் வெள்ளிக்கிழமை நடந்த மோதலில் கொல்லப்பட்டவர்களாவர்.

வெள்ளிக்கிழமை ஜும்ஆவிற்கு பிறகு துவங்கிய போராட்டம் நேற்றும் தொடர்ந்து நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டோர் பல இடங்களில் ராணுவத்துடன் மோதலில் ஈடுபட்டனர். அதேவேளையில், மோதலில் 19 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டதாகவும், 75 பேருக்கு காயமேற்பட்டதாகவும் அதிகாரப்பூர்வ செய்தி ஏஜன்சியான ஸனா தெரிவிக்கிறது.

பாதுகாப்பு அதிகாரிகளின் மரணத்தை சிரியாவின் உள்துறை அமைச்சகமும் உறுதிச்செய்துள்ளது.

கிழக்கு சிரியாவில் நேற்று குர்துகளும் வீதிகளில் இறங்கி போராடத் துவங்கினர். லடாகியா, தார்தூஸ், ஹும்ஸ், இத்லிப் ஆகிய நகரங்களிலும் போராட்டம் நடைபெற்றது. மூன்று பேர் கொல்லப்பட்ட ஹரஸ்தாவில் கடுமையான துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகளை மேற்கோள்காட்டி பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

யெமனில் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹிற்கு எதிராக தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் மக்கள் கூட்டத்தை கூட்டத்தை கலைப்பதற்காக ராணுவம் துப்பாக்கியால் சுட்டதில் ஆறுபேர் கொல்லப்பட்டதாக அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்கு நகரமான தைஸில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இப்பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு துவங்கிய போராட்டம் நீடிக்கிறது. ஸாலிஹ் பதவி விலகக்கோரியும், துப்பாக்கிச்சூட்டிற்கு எதிராகவும் நேற்றும் ஹுதைதாவில் 15 ஆயிரம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடந்தது.

எகிப்தில் முன்னாள் அதிபர் ஹுஸ்னி முபாரக்கின் மீது குற்ற விசாரணை நடத்தக்கோரி தஹ்ரீர் சதுக்கத்தில் நேற்றும் போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் இரண்டுபேர் கொல்லப்பட்டனர்.

நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக