14 ஏப்ரல் 2011

கத்தாஃபிக்கு எதிராக ஐரோப்பியன் யூனியன் பொருளாதார தடை

பெர்லின்:எதிர்ப்பாளர்களுக்கு எதிராக யுத்தம் புரியும் லிபியாவின் சர்வாதிகாரி முஅம்மர் கத்தாஃபியின் பொருளாதார பலத்தை தகர்க்கும் விதமாக ஐரோப்பிய யூனியன் அவருக்கெதிராக பொருளாதார தடைகளை வலுப்படுத்தியுள்ளது.

லக்‌ஷம்பர்க்கில் கூடிய ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

கத்தாஃபியின் போராட்டத்திற்கு பொருளாதார உதவிகளை வழங்கும் 27 எரிவாயு, எண்ணெய் நிறுவனங்களின் ஐரோப்பிய வங்கிகளிலுள்ள கணக்குகள் முடக்கப்படும். மேற்கத்திய நாடுகளின் படையினரின் ஆதரவுடன் முன்னேறும் எதிர்ப்பாளர்களுக்கு ராணுவ உதவி வழங்கவும் நேற்று முன்தினம் லக்‌ஷம்பர்க்கில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிடோ வெஸ்டர்வெல் தெரிவித்துள்ளார்.

லிபியாவில் ஏராளமான பொருளாதார நிறுவனங்களின் கணக்குகளும் ஐரோப்பிய யூனியன் முடக்கியுள்ளது.

ராணுவ உதவி வழங்க தயார் என அறிவித்த வெஸ்டர்பெல், லிபியாவில் மேற்கத்திய படை தலைமை வகிக்கும் வான்வழி பயண தடை மண்டலத்தை உருவாக்கும் லட்சியத்தில் ஜெர்மனி கூட்டுச் சேராது என்ற தீர்மானத்தில் மாற்றமில்லை என தெரிவித்தார்.

கத்தாஃபி மற்றும் எதிர்ப்பாளர்களிடையே பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆப்பிரிக்க யூனியன் பொறுப்பு வழங்கிய மத்தியஸ்த குழு நேற்று முன்தினம் இரு பிரிவினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

லிபியாவில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கத்தர் நாட்டின் தலைநகரான தோஹாவில் கூடிய உலக தலைவர்களின் கூட்டத்தில் கத்தாஃபி பதவி விலகவேண்டுமென்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. எதிர்ப்பாளர்களுக்கு ஆயுத உதவி வழங்கவேண்டுமென பிரிட்டன், இத்தாலி, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக