10 ஏப்ரல் 2011

லோக்பால்:இது ஆரம்பமே, இனிமேல்தான் பெரிய போராட்டம் நடைபெறவிருக்கிறது – அன்னா ஹஸாரே

புதுடெல்லி:ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்கான போராட்டம் வெற்றியடைந்ததை -யடுத்து தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட சமூக சேவகரும், காந்தியவாதியுமான அன்னா ஹஸாரே, இப்போராட்டம் துவக்கமே, இனிமேல்தான் பெரிய போராட்டம் நடைபெறவிருக்கிறது என கூறியுள்ளார்.

லோக்பால் மசோதா பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். ஊழலுக்கெதிரான போராட்டத்திற்காக அரசும், மக்கள் பிரதிநிதிகளும் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி. சம்பந்தப்பட்ட பிரிவினருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு குழு மசோதாவை தயாரிக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, மசோதாவை தயார் செய்வதற்காக மக்கள் பிரதிநிதிகளும், அரசும் இணைந்த பத்து உறுப்பினர்களைக் கொண்ட ஒருங்கிணைந்த குழு உருவாக்குவது தொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து அன்னா ஹஸாரே உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். காலை 10.50 மணிக்கு அறிவிக்கையின் நகல் போராட்ட பந்தலில் கிடைத்த பிறகே ஹஸாரே உண்ணாவிரதத்தை முடித்தார்.

ஐந்து அமைச்சர்களும்,ஐந்து மக்கள் பிரதிநிதிகளும் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெறுவர். அரசு சார்பாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைவராகவும், மக்கள் பிரதிநிதிகள் சார்பாக பிரபல வழக்கறிஞர் சாந்திபூஷன் துணைத் தலைவராக செயல்படுவார். சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கன்வீனராவார். அன்னா ஹஸாரேயும் இக்குழுவில் உறுப்பினராக இடம்பெற்றுள்ளார். அரசு சார்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஸல்மான் குர்ஷித் ஆகியோரும், மக்கள் பிரதிநிதிகள் சார்பாக நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்ற நீதிபதி பிரசாந்த் பூஷன், அரவிந்த் கேஜ்ரவால் ஆகியோரும் உறுப்பினர்களாக செயல்படுவர்.

உண்ணாவிரதத்தை முடித்த பிறகு கூடியிருந்தவர்களிடையே அன்னா ஹஸாரே உரையாற்றியதாவது: “இது ஊழலுக்கான போராட்டம் இத்துடன் முடிந்துவிடாது. இது ஆரம்பம் மட்டுமே. இனிமேல்தான் பெரிய போராட்டங்களுக்கு நாம் தயாராக வேண்டும்.

ஊழலுக்கெதிரான போராட்டம் இரண்டாவது சுதந்திரப் போராட்டமாகும். ஊழலை அழித்தொழிக்க நாட்டின் கட்டமைப்பில் மாற்றம் கொண்டுவர வேண்டும். மக்கள் ஆதரவின் மூலமாக எங்களுக்கு மேலும் சக்தி கிடைத்துள்ளது. எம்.பிக்களையும், எம்.எல்.ஏக்களையும் தேர்வுச்செய்து அனுப்புவது மக்களுக்கு சேவை செய்வதற்கே. மாறாக,மக்களின் எஜமானர்களாக அல்ல. ஆனால், அவர்கள் அதனை மறந்துவிடுகின்றனர்.

ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு முன்பாக மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்காக இதனைவிட பெரிய போராட்டம் தேவைப்படும் என கருதுகிறேன். எம்.பிக்கள் மசோதாவை எளிதில் நிறைவேற்ற அனுமதிப்பார்கள் என நான் கருதவில்லை. இப்போராட்டத்திற்கு இவ்வளவு பெரிய மக்கள் ஆதரவு கிடைக்குமென நான் கருதவில்லை. ஊழலால் பொறுமையிழந்த மக்கள் களமிறங்கினர்.” இவ்வாறு ஹஸாரே தெரிவித்தார்.

தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய்.குரைஷி, சி.ஏ.ஜி.விநோத் ராய் ஆகியோர் போராட்டக்காரர்களை பாராட்டினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக