16 ஏப்ரல் 2011

யெமன்:பெருமளவிலான ராணுவத்தினர் எதிர்ப்பாளர்களுடன் இணைந்தனர்

ஸன்ஆ:யெமன் நாட்டில் பெருமளவிலான ராணுவத்தினர் எதிர்ப்பாளர்களுடன் இணைந்துள்ளனர். குடியரசு படை, மத்திய பாதுகாப்புப் படை, விமானப்படை ஆகியவற்றைச் சார்ந்த ராணுவத்தினர் எதிர்ப்பாளர்களுடன் இணைந்துள்ளனர்.

அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு அதிகாரத்தை கீழ் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸன்ஆவில் எதிர்ப்பாளர்கள் மத்தியில் தோன்றிய ராணுவத்தினரை மக்கள் கரகோஷத்துடன் வரவேற்றனர். பணியிலிருந்து விலகப்போவதை முன்னரே ராணுவத்தினர் கமாண்டர் ஜெனரல் அலி முஹ்ஸின் அல் அஹ்மருக்கு தெரிவித்திருந்தனர். இளைஞர்களின் அமைதியான முறையிலான புரட்சியை பாதுகாப்போம், ஆதரிப்போம் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே, ஸன்ஆவில் எதிர்ப்பாளர்கள் அணியில் சேர்ந்த ராணுவத்தினருக்கும், அரசு ஆதரவு ராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் ஐந்துபேர் கொல்லப்பட்டனர். ஏடனில் இரண்டுபேர் மரணித்துள்ளனர்.

போராட்டத்தை நிறுத்த சவூதியின் மத்தியஸ்த முயற்சியை நிராகரித்துள்ள எதிர்ப்பாளர்கள் இரண்டு வாரத்திற்குள் ஸாலிஹ் பதவி விலகவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். பேச்சுவார்த்தைக்காக ரியாதிற்கு செல்ல தயாரில்லை என எதிர்கட்சி தலைவர் முஹம்மது அல் முதவக்கில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஜி.சி.சி நாடுகள் முன்வைத்த அமைதிக்கான நிபந்தனைகளை ஸாலிஹ் அங்கீகரித்துள்ளார்.


நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக