07 மார்ச் 2011

நடுவானில் தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

பாலசோர் : எதிரி நாட்டு ஏவுகணையை நடுவானில் தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணையை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. எதிரி நாடுகள் ஏவும் ஏவுகணைகளை நடுவானிலேயே தாக்கி அழிக்கும் நவீன வான் பாதுகாப்பு ஏவுகணையை இந்திய விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இதை, ஏற்கனவே 5 முறை விஞ்ஞானிகள் சோதனை செய்துள்ளனர். கடைசியாக கடந்த ஆண்டு மார்ச்சில் நடந்த சோதனை தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், அந்த ஏவுகணையை மீண்டும் சோதனை செய்ய விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடு ஒரிசாவில் சண்டிபூர், வீலர் தீவில் உள்ள ஏவுகணை சோதனை மையங்களில் நடந்து வந்தது. சண்டிபூர் ஏவுதளத்தின் 2 கி.மீ சுற்றளவில் உள்ள கிராமங்களில் வசிக்கும் 3220 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
இதன்பின், சண்டிபூர் மையத்தில் இருந்து பிருத்வி ஏவுகணையை, எதிரி நாட்டு ஏவுகணை போல் அனுப்ப திட்டமிடப்பட்டது.

இதை வீலர் தீவில் இருந்து ஏவப்படும் நவீன வான் பாதுகாப்பு ஏவுகணை நடுவானில் தாக்கி அழிக்க வேண்டும். இதன்படி, நேற்று காலை 9.32 மணிக்கு சண்டிபூரில் இருந்து பிருத்வி ஏவுகணை ஏவப்பட்டது. அந்த ஏவுகணை செல்லும் திசை, பாதை, வேகம் ஆகியவற்றை பல இடங்களில் பொருத்தப்பட்டிருந்த ரேடார்கள் கண்காணித்தன. இந்த தகவல்கள் சண்டிபூரில் இருந்து 70 கி.மீ தூரத்தில் வங்கக்கடலில் உள்ள வீலர் தீவில் உள்ள ஏவுகணை சோதனை மையத்தில் நிறுத்தப்பட்டிருந்த நவீன வான் பாதுகாப்பு ஏவுகணையில் பொருத்தப்பட்டுள்ள கம்ப்யூட்டருக்கு நேரடியாக அனுப்பப்பட்டன.

கம்ப்யூட்டர் செயல்பாட்டில் காலை 9.37 மணிக்கு வான் பாதுகாப்பு ஏவுகணை தானாகவே புறப்பட்டது. ஒலியைவிட 4.5 மடங்கு வேகத்தில் வானில் சீறி பாய்ந்த ஏவுகணை 16 கி.மீ உயரத்தில் பிருத்வி ஏவுகணையை தாக்கியது. இதில் 7 மீட்டர் நீளமுள்ள பிருத்வி ஏவுகணை நொறுங்கி கடலுக்குள் விழுந்தது. சோதனை வெற்றிகரமாக நடந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.


செய்தி :-  தினகரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக