17 மார்ச் 2011

அமெரிக்காவுக்கு அடிபணிந்த பாகிஸ்தான்: ஈட்டுத் தொகையை பெற்று ரேமண்ட் டேவிஸ் விடுதலை

இஸ்லாமாபாத்:கடந்த ஜனவரி மாதம் லாகூரில் இரண்டு பாகிஸ்தானியர்களை அநியாயமாக சுட்டுக் கொன்ற தூதரக அதிகாரி போர்வையில் செயல்பட்ட சி.ஐ.ஏ உளவாளி ரேமண்ட் டேவிஸ் கைது செய்யப்பட்டிருந்தார்.

டேவிஸ், தூதரக அதிகாரி எனவும், தூதரக அதிகாரிக்கான சிறப்பு சலுகையின் அடிப்படையில் அவரை உடனடியாக விடுதலைச் செய்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென அமெரிக்கா பாகிஸ்தானை தொடர்ந்து நிர்பந்தித்து வந்தது.

இந்நிலையில் திடீரென கொலைச் செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஈட்டுத் தொகையை(ப்ளட் மணி) அளித்துவிட்டு ரேமண்ட் விடுதலைச் செய்யப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் சட்டத்தின்படி கொலைச் செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் மன்னிப்பு வழங்கினால் குற்றவாளிக்கு விடுதலை கிடைக்கும். அதேவேளையில், கொலைச் செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை நிர்பந்தப்படுத்தி கையெழுத்திட வைத்ததாக அவர்களின் வழக்கறிஞர் குற்றஞ்சாட்டுகிறார்.

ஆனால், இதனைக் குறித்து கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் கருத்துத் தெரிவிக்கவில்லை. எவ்வளவு தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது வெளியிடப்படவில்லை. இவ்வழக்கில் லாகூர் நீதிமன்றம் கொலைக்குற்றம் சுமத்திய உடனேயே மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது.

வழிப்பறிக் கொள்ளை நடத்த முயன்றவர்களிடமிருந்து தப்பிக்க தற்காப்பிற்காக சுட்டதாக 35 வயதான டேவிஸ் கூறியிருந்தார்.

தீவிர பாதுகாப்பின் கீழ் கோட் லக்பத் சிறையில் டேவிஸின் மீதான விசாரணை நடந்திருந்தது. கொலைச்செய்யப்பட்டவர்கள் பாகிஸ்தான் ரகசிய உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐயின் அதிகாரிகள் என செய்திகள் வெளியாயின.

டேவிஸின் விடுதலையை உறுதிச் செய்த அமெரிக்க தூதரக அதிகாரிகள் பாகிஸ்தானிகளின் கொலைச் செய்த குற்றம் குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக