22 மார்ச் 2011

எகிப்து:அரசியல் சட்ட திருத்தத்திற்கு மக்கள் அமோக ஆதரவு

கெய்ரோ:எகிப்தில் ராணுவ அரசு அரசியல் சட்டத்திருத்தம் தொடர்பாக மக்கள் கருத்தினை ஆராய்வதற்காக விருப்ப வாக்கெடுப்பை நடத்தியது.

இந்த வாக்கெடுப்பில் 1.8 கோடி எகிப்திய வாக்காளர்கள் பங்கேற்று வாக்களித்தனர். வாக்களித்தவர்களில் 77 சதவீதம் பேர் அரசியல் சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதனை உயர்மட்ட கவுன்சில் அறிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை விருப்ப வாக்கெடுப்பு நடந்தது.ஒன்பது அரசியல் சட்ட சீர்திருத்தங்களுக்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதில் பாதி தேர்தல் தொடர்பானவையாகும். அதிபர் பதவிக்கான கால அளவை சுருக்குதல், ஆறுமாதத்திற்கு மேல் அவசரச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொழுது மக்கள் விருப்ப வாக்கெடுப்பை நடத்துவது ஆகியன இவற்றில் அடங்கும்.

மக்கள் விருப்ப வாக்கெடுப்பில் அரசியல் சட்ட சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதால் உடனடியாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.தேர்தல் வருகிற ஜூன் மாதம் நடைபெறும் என ராணுவ கவுன்சில் முன்னர் அறிவித்திருந்தது.

மக்கள் விருப்பவாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென நேசனல் டெமோக்ரேடிக் கட்சியும்,முஸ்லிம் சகோதரத்துவ இயக்கமும் அழைப்பு விடுத்திருந்தன. ஆனால், ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய இளைஞர்களின் கூட்டணி ஆதரவாக வாக்களிக்க வேண்டாமென்ற நிலைப்பாட்டில் உள்ளது.

நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக