30 மார்ச் 2011

லிபியாவின் எதிர்காலத்தைக் குறித்து விவாதிக்க லண்டனில் கூட்டம்

லண்டன்:லிபியாவின் எதிர்காலத்தைக் குறித்து விவாதிக்க பல்வேறு நாடுகளின் கூட்டம் லண்டனில் துவங்கியுள்ளது.

லிபியாவில் எதிர்ப்பு கவுன்சில் தலைவர் முஹம்மது ஜிப்ரீலுடன் கூட்டத்திற்கு முன்பு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் பேச்சுவார்த்தை நடத்தினார். கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் பிரிட்டீஷ் வெளியுறவு செயலாளர் வில்லியம் ஹேகின் அழைப்பை ஏற்று ஜிப்ரீல் லண்டனுக்கு வருகைத் தந்தார். எதிர்ப்பாளர்களுடன் உறவை பலப்படுத்துவோம் என பிரிட்டனும், அமெரிக்காவும் அறிவித்துள்ளன. கத்தாஃபி கீழ்படியும் வரை தாக்குதல் தொடரும் என ஹிலாரி கூட்டத்தில் தெரிவித்தார்.

கத்தாஃபியின் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளைக் குறித்து கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும். ஐ.நா, நேட்டோ, ஆப்பிரிக்கன் யூனியன், அரபு லீக் ஆகியவற்றின் 40 பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
லிபியாவில் ராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தி அமெரிக்கா ஒபாமா அறிக்கை வெளியிட்டுள்ளார். பின் ஜவாத் நகரத்தை எதிர்ப்பாளர்கள் இழப்பதற்கு சற்று முன்பு இவ்வறிக்கை வெளியானது.

சிவிலியன்கள் கொல்லப்படும் பொழுது நாட்டில் சம்பவங்களின் தெளிவான நிலைமைக்காக காத்திருக்க முடியாது என ஒபாமா தெரிவித்திருந்தார். கத்தாஃபியின் அத்துமீறலை தடுப்பதற்கும் பிராந்தியத்தில் பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கும் லிபியாவில் தலையிட்டோம். லிபியாவில் ஆட்சி மாற்றம் என்பது நோக்கமல்ல. ராணுவ நடவடிக்கையின் கட்டுப்பாட்டை இன்று நேட்டோவிடம் ஒப்படைப்போம் என்றார் அவர்.

லிபியாவின் உள்நாட்டுப் போரில் தலையிடுவதற்கு ஐ.நாவின் தீர்மானம் அனுமதியளிக்கவில்லை என ரஷ்யா தொடர்ந்து கூறிவருகிறது. லிபியாவில் குண்டுவீசுவதை அங்கீகரிக்க இயலாது என நேட்டோவில் ரஷ்யாவின் பிரதிநிதி திமித்ரி ரொகோஸின் தெரிவித்துள்ளார். விமானம் பறப்பதற்கு தடை, ஆயுதம் கொண்டுசெல்ல தடை ஆகிய ஐ.நா தீர்மானத்தின் பிரகடனத்தை நேட்டோ கைவிடக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.


நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக