21 மார்ச் 2011

லிபியாவில் பன்னாட்டுப் படைகளின் தாக்குதலில் 48 பேர் பலி

திரிபோலி:ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தையும், சர்வதேச நாடுகளின் எச்சரிக்கையையும் மீறிய லிபியாவின் மீது பன்னாட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் 48 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனல் அறிவித்துள்ளது. 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

லிபியாவின் வான் எல்லைக்குள் நுழைந்த பிரான்சு நாட்டு போர் விமானங்கள் லிபிய ராணுவத்தின் டாங்குகள் மீது தாக்குதல் நடத்தின. ஏராளமான ராணுவ வாகனங்களையும், டாங்குகளையும் தகர்த்தாக பிரான்சு கூறுகிறது.

பிரான்சுடன் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் லிபியாவின் மீது தாக்குதல் நடத்த துவங்கியதாக பெண்டகன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கத்தாஃபியின் ஆதரவு ராணுவத்தின் மையங்கள் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் போர்க் கப்பல்கள் க்ரூஸ் ஏவுகணைத் தாக்குதலைத் தொடுத்ததாக செய்திகள் கூறுகின்றன. இரு ராணுவமும் 100க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவியதாக பெண்டகன் உறுதிச் செய்துள்ளது.

பிரிட்டீஷ் ராணுவமும் தாக்குதலைத் துவங்கியுள்ளதாக பிரிட்டனின் பிரதமர் டேவிட் காமரூன் தெரிவித்துள்ளார். லிபியாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை நியாயமானதும், சரியானதுமாகும் என அவர் கூறுகிறார்.

அரபு லீக், ஆப்பிரிக்க யூனியன், மேற்காசிய நாடுகளின் தலைவர்கள் ஆகியோருடன் நடத்திய சந்திப்பிற்கு பிறகு முஅம்மர் கத்தாஃபிக்கெதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள பிரான்சு நாட்டு அதிபர் நிக்கோலஸ் சர்கோசி உத்தரவிட்டார்.

இந்திய நேரம் இரவு 10.15.மணிக்கு இருபதுக்கும் மேற்பட்ட பிரான்சு விமானங்கள் லிபியாவின் எல்லையைக் கடந்து சென்றது. முன்னர் பெங்காசியில் ரோந்து சுற்றும்பொழுது லிபியாவின் ராணுவம் சுட்டுவீழ்த்திய விமானம் பிரான்சுக்கு சொந்தமானது என ஊகமும் நிலவுகிறது. இதனால், சர்கோஸி தாக்குதல் நடத்த தயாரானதாக கூறப்படுகிறது.

பிரான்சு நாட்டு போர் விமானங்கள் லிபியாவின் ராணுவ வாகனங்கள் மீது குண்டுகளை வீசியதாக பிரான்சு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. லிபியாவின் ராணுவத்தின் மீது பிரான்சு கடுமையான தாக்குதல் நடத்தியதாக செய்தி ஏஜன்சிகள் தெரிவிக்கின்றன. தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கையில் பங்கேற்பதற்காக மேலும் போர் விமானங்கள் தயாராகயிருப்பதாக கூறப்படுகிறது.

கத்தாஃபியின் ராணுவத்திற்கெதிராக கூட்டணி நாடுகள் நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

மக்களுக்கெதிரான தாக்குதலை நிறுத்தாவிட்டால் எதிர் விளைவுகள் கடுமையாக இருக்குமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். லிபியாவிற்கெதிரான நடவடிக்கை மேற்கொள்வது குறித்து பாரிஸில் கூடிய அவசரக் கூட்டத்தில் சர்கோஸி, காமரூன், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஆனால், கூட்டணி நாடுகளின் தாக்குதலை என்ன விலைக் கொடுத்தேனும் எதிர்ப்போம் என்ற நிலைப்பாட்டில் முஅம்மர் கத்தாஃபி உள்ளார்.

லிபியாவின் தலைநகரமான திரிபோலியிலும் ஏராளமான வெடிச்சத்தங்கள் கேட்பதாக செய்திகள் கூறுகின்றன. தாக்குதலை எதிர்க்க கத்தாஃபி மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக மக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்த பிரகடனத்தை மீறி எதிர்ப்பாளர்களின் செல்வாக்கு மிகுந்த பெங்காசியின் மீது லிபிய ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தியது. லிபியாவில் விமானம் பறக்கத் தடையை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அறிவித்ததைத் தொடர்ந்து போர் நி்றுத்த பிரகடனத்தை வெளியிட்ட லிபியா அதனை மீறி பெங்காசியின் மீது தாக்குதலை நடத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக