29 ஜனவரி 2011

இரு நாடு கருத்துக்கு முதலில் வித்திட்டவர் வீர சவர்க்கர்தான், ஜின்னா அல்ல-காங்.


டெல்லி: இந்தியா இரு நாடுகளாக பிரிய வேண்டும் என்ற கருத்தை முதலில் வைத்தவர் முகம்மது அலி ஜின்னா அல்ல, மாறாக, சுதந்திரப் போராட்ட வீரர் வீர சவர்க்கர்தான் என்று கூறியுள்ளார் சமீப காலமாக சர்ச்சையாகவே பேசி வரும் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்.

டெல்லியில் உள்ள இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு சிங் பேசுகையில், சுதந்திரப் போராட்ட வீரர் வீர சவர்க்கர்தான் முதன் முதலில் இரு நாடு என்ற கொள்கையை பரப்பியவர் ஆவார். இதுதான் பின்னர் தீவிரமடைந்து இந்தியா, பாகிஸ்தான் என நாடு சிதறக் காரணமாக அமைந்தது.

வீர சவர்க்கர் பரப்பிய இந்த பிரசாரத்தைத்தான் பின்னர் முகம்மது அலி ஜின்னா தனது கொள்கையை வரித்துக் கொண்டார். பாகிஸ்தான் பிரிவினையில் போய் அது முடிந்தது.


எப்போதுமே தீவிர மத, இனக் கொள்கைகள் பிரிவினையில்தான் போய் முடியும் என்பதை சொல்லவே இதைக் கூறுகிறேன். வீர சவர்க்கரும் சரி, ஜின்னாவும் சரி எதிலுமே நம்பிக்கை இல்லாதவர்கள். தீவிரவாத கொள்கைகளைக் கொண்டவர்கள் எப்போதுமே இப்படித்தான் நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பார்கள்.

அதேசமயம், ஒரு நல்ல இந்து அல்லது நல்ல முஸ்லீம், நம்பிக்கை உணர்வுடன் கூடியவர்களாக இருப்பார்கள் என்றார் திக்விஜய் சிங்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக