04 நவம்பர் 2010

ஒபாமா பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி : மும்பை நகரில் வரலாறு காணாத பாதுகாப்பு

மும்பை : அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகைக்காக மும்பை நகரம் முழுமையாக மாறிவிட்டது. வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒபாமாவின் பாதுகாப்புக்காக, ஒரு நாளைக்கு செலவிடப்படும் தொகை 900 கோடி ரூபாய்.


அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது மனைவி மிச்சேலுடன் நான்கு நாள் பயணமாக, தீபாவளிக்கு அடுத்த நாள் (6ம் தேதி), மும்பைவருகிறார். ஒபாமாவுடன், அமைச்சரவை சகாக்கள், ரகசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள், உளவு போலீசார், பத்திரிகையாளர்கள் உட்பட மொத்தம் மூன்றாயிரம் பேர் கொண்ட குழு வருகிறது. ஒபாமாவின் வருகையையொட்டி, அதிபருக்கான ரகசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே ஒரு வாரத்திற்கு முன்பாக மும்பை வந்து பாதுகாப்பு வியூகங்களை அமைத்துள்ளனர்.மேலும்,
அமெரிக்கா வில் இருந்து ஹெலிகாப்டர் கள், கப்பல் மற்றும் உயர் தொழில்நுட்ப சாதனங்களுடன் கூடிய பாதுகாப்பு கருவிகள் மும்பை வந்துவிட்டன. தாஜ் ஓட்டலில் தங்கும் ஒபாமா, எந்த அறையில் தங்குகிறார் என்பது ரகசியமாகவைக்கப் பட்டுள்ளது.தாஜ் ஓட்டலில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்டனர். தாஜ் ஓட்டல் மற்றும் டிரைடன்ட் ஓட்டல் அருகே பாதுகாப்பு கருதி தடுப்பு வேலிகளை அமைத்துள்ளனர். "ஒபாமாவுடன் செல்லும் மெய்க்காப்பாளர்கள் மட்டுமே கையில் துப்பாக்கி வைத்து இருப்பார்கள், மற்ற அமெரிக்க அதிகாரிகள் வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை' என, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.


வரலாறு காணாதது: மும்பை நகர் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மும்பை நகரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக உள்ளதா என்பதை பரிசோதித்து பார்க்கும் வகையில், மும்பை நகரில் நாளை ஒத்திகை நடக்கிறது. இதில் அமெரிக்க ரகசிய படைப் பிரிவினர், இந்திய உளவுத்துறையின், தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், மும்பை போலீசார், முப்படையை சேர்ந்த வீரர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர். அமெரிக்க விமான போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரிகளும் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை நகரில், ஒபாமாவின் ஒரு நாள் பாதுகாப்புக்காக மட்டும் ரூ.900 கோடி செலவிடப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தேங்காய் விழக்கூடாது: மும்பை நகரில் ஒபாமா பயணிக்கும் பாதைகளில், சாலையோரமிருக்கும் மரங்களிலிருந்து கிளைகள் ஒடிந்து விழாமலும், தென்னை மரத்தில் இருந்து தேங்காய் விழாமல் இருக்கவும் உன்னிப்பாக கண்காணிக்கும்படி மாநகராட்சி ஊழியர்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். அதற்காக மும்பை நகரில் பிரதான சாலைகள் அருகேயிருந்த மரங்களில் நீட்டிக்கொண்டு, எப்போது விழுமோ என்று அச்சுறுத்திக்கொண்டிருந்த கிளைகளையெல்லாம் வெட்டி சுத்தம் செய்து வைத்துள்ளனர். தீபாவளி பண்டிகை கொண்டாட் டங்களை விட, ஒபாமாவின் வருகைக்காக மும்பை நகரமே மாறியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக