04 நவம்பர் 2010

போதைப்பொருள் குற்றச்சாட்டு 65 பேருக்கு கசையடித் தண்டனை

இஸ்லாமாபாத்,நவ.4:பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதியில் போதைப் பொருட்களை விற்பனை செய்தமை மற்றும் அவற்றைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் தலிபான் போராளிகளால் 65 பேருக்கு பகிரங்கமாகக் கசையடித் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஒராக்ஷை பழங்குடியினப் பகுதியிலேயே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள 90 வீதமான பகுதிகள் போராளிகளிடமிருந்து மீட்கப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையிலேயே பொதுமக்களின் மத்தியில் இத்தண்டனையை தலிபான்கள் வழங்கியுள்ளனர்.

ஹாஸிஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை விற்றமை மற்றும் பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டில் தெஹ்ரிக்-இ-தலிபான் போராளிகளால் சிறை வைக்கப்பட்டிருந்த 65 பழங்குடியின உறுப்பினர்களும் மமோஸை பகுதியிலுள்ள ஷரிஆ நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டனர்.

தம்மீதான குற்றச்சாட்டுகளை இவர்கள் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மைதானமொன்றுக்கு அழைத்துவரப்பட்ட இவர்கள் ஒவ்வொருவருக்கும் அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில் 10 கசையடிகள் வழங்கப்பட்டன.

இப்பகுதியில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை என்பவற்றுக்கு தலிபான்கள் தடைவிதித்துள்ள நிலையில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் மீண்டும் இடம்பெறக் கூடாது என்பதை எச்சரிக்கும் முகமாகவே பகிரங்கமாக இவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

ரைம்ஸ் ஒவ் இந்தியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக