27 ஆகஸ்ட் 2011

துபாயில் சட்டவிரோதமாக போராட்டம் நடத்திய இந்தியர்களுக்கு ஜாமீன் மறுப்பு

துபாய்:இந்தியாவில் ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறி களமிறங்கியிருக்கும் அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் மாகாணமான துபாயில் அதிகாரிகளின் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக பேரணி நடத்திய இந்தியர்கள் எட்டு பேர் கைதுச் செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கான ஜாமீன் மனுவை துபாய் பப்ளிக் ப்ராஸிக்யூசன் நிராகரித்துவிட்டது. வழக்கின் விசாரணை பூர்த்தியாகததால் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு சட்டத்திற்கு விரோதமாக திரண்டு போராட்டம் நடத்தியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

துபாயில் ஒரு டிராவல் ஏஜன்சியில் பணிபுரியும் கேரளாவைச் சார்ந்த பிரசன்னகுமார், போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்த ராஜேஷ் பிஷன் தாஸ், பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த ஸமித் மிஷ்ரா, மத்தியபிரதேச மாநிலத்தைச் சார்ந்த ஹிமாம்ஷு ஜோஷி, ஹிம்மத் லால் உள்ளிட்ட எட்டு பேர்தாம் துபாய் போலீசாரால் கைதுச் செய்யப்பட்டனர்.

கடந்தவாரம் சனிக்கிழமை மாலை துபாயிலிலுள்ள மம்ஸார் பார்க்கில் பெண்கள், குழந்தைகள் உள்பட எண்பதிற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சட்டவிரோதமாக பேரணி நடத்தினர். தலைமை தாங்கியவரை தவிர இதர அனைவரையும் போலீசார் அமைதியாக கலைந்து செல்லுமாறு கூறினர். பின்னர் நடந்த விசாரணையில் ஃபேஸ்புக் என்ற சமூக இணையதளம் வழியாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக அணிசேர தூண்டிய இதர நபர்கள் கைதாகினர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் விடுமுறையான 9 தினங்களுக்கு பிறகு இவர்களுடைய ஜாமீன் மனு மீண்டும் பரிசீலிக்கப்படும்.

அதேவேளையில், ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அன்னா ஹஸாரேவை ஆதரிப்பவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் சட்டம் ஒழுங்குகளை பேணுவதற்கு கடமையுடையவர்கள் என துபாயில் இந்திய தூதரக ஜெனரல் சஞ்சய் வர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் பல மாற்றங்களும், அரசியல் நகர்வுகளும் நிகழலாம். வெளிநாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் இதற்கு எல்லாம் போராட்டம் நடத்தக்கூடாது. நாட்டில் நடைபெறும் பல சம்பவங்களுக்கும் வெளிநாடுகளிலிருந்து பதில் அளிக்கும் வேளையில் எச்சரிக்கையுடன் செயல்பட எல்லா இந்தியர்களோடும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக