21 ஏப்ரல் 2011

ஏழைக்கு ஒரு இந்தியா, பணக்காரருக்கு ஒரு இந்தியாவா? - உச்சநீதிமன்றம் கோபம்

டெல்லி: இந்தியாவை சக்திவாய்ந்த நாடு என்று நீங்கள் கூறிக்கொள்கிறீர்கள். அதே நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டினிச்சாவுகள் நடைபெற்று வருகின்றன. ஏழைக்கு ஒரு இந்தியா, பணக்காரருக்கு ஒரு இந்தியாவா?, என்று கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம் .

நாடு முழுவதும் நியாய விலைக்கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த பொது வினியோக திட்டத்தில் பெரிய அளவில் ஊழலும் முறைகேடும் நடைபெறுவதாக மக்கள் உரிமைக்கான சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் வர்மா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன், பொது வினியோக திட்டத்தை சீரமைப்பதற்காக அரசு மேற்கொண்ட முயற்சியால் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினை பெருமளவில் குறைந்து வருவதாகக் குறிப்பிட்டார்.

ஏழை - பணக்காரனுக்கு தனித்தனி இந்தியாவா?


அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் நாட்டில் பெருகிவரும் பட்டினிச்சாவு குறித்து தங்கள் ஆழ்ந்த கவலையை வெளியிட்டனர். பணக்காரர்களுக்கு ஒன்று ஏழைகளுக்கு ஒன்று என இரண்டு இந்தியா இருக்க முடியாது என்றும் கருத்து தெரிவித்தனர்.

மேலும் கூறுகையில், "இந்தியாவை சக்திவாய்ந்த நாடு என்று நீங்கள் கூறிக்கொள்கிறீர்கள். அதே நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டினிச்சாவுகள் நடைபெற்று வருகின்றன. நாட்டில் அமோக விளைச்சல் ஏற்பட்டு கிடங்குகளில் உணவு தானியங்கள் நிரம்பி வழிவதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.

இது நமக்கெல்லாம் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்கிறபோது என்ன பிரயோஜனம்? பட்டினியால் ஆயிரக்கணக்கானவர்கள் இறக்கும்போது, நாட்டில் தேவையான உணவுபொருட்கள் இருப்பில் உள்ளதாக அரசு கூறுவதன் தர்க்க நியாயம் என்ன? என்று புரியவில்லை.

ஊட்டச்சத்து குறைபாடு குறைந்து வருவதாக நீங்கள் கூறுவதற்கு என்ன அர்த்தம்? ஊட்டச்சத்து குறைபாடு முழுமையாக நாட்டில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும். நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை மக்கள் 36 சதவீதம் என்று எந்த அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது? இதற்கு திட்ட கமிஷன் விளக்கம் அளிக்க வேண்டும்.

கடந்த 1991-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், தற்போது 2011-ம் ஆண்டில் நாட்டின் மக்கள் தொகையில் 36 சதவீதம் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பதாக நிர்ணயித்து இருப்பது திகைப்பை அளிக்கிறது.

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநிலங்கள், இந்த சதவீதம் அதிகமாக இருக்கும் என்றும், அதற்கு ஏற்ப கூடுதல் உணவு தானியங்களை ஒதுக்க வேண்டும் என்று கோரி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து உள்ளன.

இந்த வருவாய் போதாதே!

ஒவ்வொரு மாநிலங்களிலும் தனிநபர் வருவாய் மாறுபடும்போது எந்த அடிப்படையில் 36 சதவீதம் என்ற அளவை திட்ட கமிஷன் நிர்ணயித்துள்ளது? நகர்ப் புறங்களில் தனி நபர் வருமானம் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய் என்றும், கிராமங்களில் 11 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் கூட இந்த வருவாய் போதாத நிலையில், எப்படி இந்த குறைந்த அளவு தொகையை வறுமைக்கோட்டிற்கான அடிப்படையாக நிர்ணயம் செய்தீர்கள்? இது குறித்து திட்ட கமிஷன் துணை தலைவர் ஒரு வாரத்திற்குள் விளக்கமான ஒருங்கிணைந்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்'', என்றனர்.

தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில், நாடு முழுவதிலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் எத்தனை சதவீதம் என்பது குறித்தும் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்கும்படியும், மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ரூ.35 ஆயிரம் கோடி ஊழல்

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் பொது வினியோக திட்டத்தில் ரூ.35 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்து இருப்பது அம்பலமாகி உள்ளது.

இது தொடர்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.பி. வாத்வா தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தனது அறிக்கையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு மானிய விலையில் வழங்கப்படும் உணவு தானியங்களில் பெரிய அளவில் கள்ள மார்க்கெட்டுக்கு திருப்பி விடப்படுவதாக குற்றம்சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக