கியூபா மீதான அமெரிக்க ஆதரவுடனான பன்றிகள் குடா ஆக்கிரமிப்பின் 50 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
50 வருடங்களுக்கு முன்னதாக, 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி கியூபா நாட்டின் சின்னங்களை தன் மீது வரைந்துகொண்ட அமெரிக்க விமானங்கள், கியூபத் தீவுகளின் விமானத் தளங்கள் மீது குண்டுகளை வீசின.
கியூபத் தலைவர் ஃபீடல் காஸ்ட்ரோவை வீழ்த்துவதற்காக கியூபாவில் இருந்து நாடு கடந்து வாழ்ந்தவர்களின் உதவியுடன், அமெரிக்கா மேற்கொண்ட பெரும் பேரழிவைத் தந்த ''Bay of Pigs'' , அதாவது ''பன்றிகள் குடா ஆக்கிரமிப்பின்'' ஆரம்பம் அதுதான்.
அது பெரும் தோல்வியாக முடிவடைந்தது. அமெரிக்க- கியூபா உறவுகளை இன்றுவரை கசப்பாக வைத்திருப்பதும் இதுதான்.
அமெரிக்க சி ஐ ஏ உளவு நிறுவனத்தால், பயிற்றப்பட்டு, நிதியுதவி அளிக்கப்பட்ட கியூபாவின் நாடுகடந்து வாழ்ந்தவர் 1400 பேர் ''பன்றிகள் குடா'' என்று அழைக்கப்பட்ட கியூபாவின் தென்பகுதியில் அமைந்துள்ள இலகுவில் சென்றடைய முடியாத தீவுக் கூட்டங்களில் ஆக்கிரமிப்பை மேற்கொண்டனர்.
ஆனால், எதிர்ப்பு எதிர்பார்க்கப்பட்டதைவிட மிகவும் அதிகமாக இருந்தது.
இந்த நடவடிக்கைகளின் மூலம் ஃபீடல் காஸ்ட்ரோவுக்கு எதிரான பெரும் எடுப்பிலான கிளர்ச்சிகள் உருவாகும் என்ற நோக்கம் தோல்வியில் முடிவடைந்தது. அத்துடன் கிளர்ச்சிக்காரர்களுக்கு போதுமான வான் மார்க்க ஆதரவை வழங்குவதற்கும் அமெரிக்க அதிபர் கென்னடி தவறிவிட்டார்.
மூன்று நாட்களுக்குள் அந்த மோதல்கள் முடிவுக்கு வந்துவிட்டதுடன், சண்டைக்காரர்கள் 1000 பேர் வரை சிறைப்பிடிக்கப்பட்டார்கள்.
இது அமெரிக்காவுக்கு ஒரு சங்கடமான தோல்வியை தந்ததுடன், காஸ்ட்ரோ அவர்கள் சோவியத் ஒன்றியத்தை நோக்கி மிகவும் உறுதியாக நட்புக்கரங்களை நீட்டவும் காரணமாகிவிட்டது.
50 வருடங்கள் கடந்துவிட்ட பிறகும் இன்றுவரை மேற்கில் இருக்கின்ற ஒரேயொரு கம்யூனிச ஆட்சி நாடாக கியூபா திகழ்கிறது.
அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சியின் கீழ் நிலைமைகள் ஓரளவு சுமூகமாக மாறினாலும், தமக்கெதிரான வணிகத்தடை என்பது இருக்கும் வரை தாம் இன்னமும் ஒரு முற்றுகைச் சூழலிலேயே இருப்பதாக கியூபா வலியுறுத்துகிறது.
மிக காலதாமதமாகிவந்த கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கிரஸ் மாநாட்டை, ஒரு பெரிய இராணுவ அணிவகுப்புடன், அதிபர் ராவுல் காஸ்ட்ரோ இந்த வார இறுதியில், புரட்சிச் சதுக்கத்தில் நடத்தவுள்ளார்.
பொருளாதார மறுசீரமைப்பு அதன் கருப்பொருளாக இருக்கும்.
பன்றிகள் குடா மீதான ஆக்கிரமிப்பை வெற்றி கொண்ட பின்னர் கியூபாவில் அரசியல் மாற்றம் என்பது இப்போதைக்கு அருகில் கிடையாது போல் தென்படுகிறது.
நன்றி (செய்தி ) :- , bbc தமிழோசை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக