டெல்லி: இந்தியா, பாகிஸ்தான் இடையிலான அரை இறுதிப் போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்குகிறது. இதையடுத்து போட்டி நடைபெறும், பஞ்சாப் மாநிலம், மொஹாலி கிரிக்கெட் மைதானத்திற்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராணுவம் பாதுகாப்புப் பணியில் இறக்கப்பட்டுள்ளது. ஏவுகணைகள், விமான எதிர்ப்புப் பீரங்கி உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொஹாலி கிரிக்கெட் ஸ்டேடியம் உள்ள பகுதியில்
விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் இரு நாட்டு பிரதமர்களும் போட்டியை நேரில் கண்டு களிக்கவுள்ளதால் இந்தப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமல்லாமல் இரு நாட்டு மக்களும் போட்டியைக் காண ஆவலாக உள்ளனர்.
தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராணுவத்தின் பொறுப்பில் பாதுகாப்பு விடப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்டேடியத்தைச் சுற்றிலும் ஏவுகணைகளை ராணுவம் நிறுத்தியுள்ளது. மேலும் ரிமோட் கன்ட்ரோல் கருவி மூலம் செயல்படுத்தக் கூடிய வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் பிரிவுகளும் களம் இறக்கப்பட்டுள்ளன. மிக சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளைக் கூட சில விநாடிகளில் இது கண்டுபிடித்துக் காட்டிக் கொடுக்கும் சக்தி வாய்ந்ததாகும்.
மேலும் சந்திமந்திரில் உள்ள வெஸ்டர்ன் கமாண்ட் ராணுவப் பிரிவைச் சேர்ந்த ஏராளமான வீரர்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
ராணுவம் தவிர விமானப்படையின் ஒத்துழைப்புடன் விமான எதிர்ப்பு பீரங்கிகள், போர் விமான ஆயத்த நிலை என சகல விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் சண்டிகர் மற்றும் மொஹாலியில் வரலாறு காணாத பதட்ட நிலை காணப்படுகிறது.
பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி இன்று காலை நேரடியாக சண்டிகர் வந்து விடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் வந்த பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் சண்டிகர் வந்து சேருவார். மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர்இரு நாட்டு தலைவர்களும் இந்தியாவில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இன்றைய சந்திப்பு அதிகாரப்பூர்வமற்றது என்று இரு நாடுகளும் விளக்கியுள்ளதால், கிரிக்கெட் தொடர்பான சந்திப்பாகவே இது இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இரு நாட்டுத் தலைவர்களும் இரு நாட்டுப் பிரச்சினை தொடர்பாகவம் பேசிக் கொள்வார்கள் என்று தெரிகிறது.
கிலானி மட்டும் பாகிஸ்தானிலிருந்து வரவில்லை. மாறாக அவருடன் 50 பேர் கொண்ட பெரிய டீமே வருகிறது. அதேபோல இந்தியத் தரப்பில் பிரதமருடன் வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவும் உடன் இருப்பார். மேலும் காங்கிரஸ் சோனியா காந்தியும் பிரதமருடன் வரவுள்ளார்.
நன்றி (செய்தி ) :- தட்ஸ்தமிழ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக