10 மார்ச் 2011

கல்வியில் பின்தங்கும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் அரசியலமைப்பு உத்தரவாதப்படுத்தியுள்ள அடிப்படைக் கல்விபெறுவதற்கான உரிமை அந்நாட்டில் 25 மில்லியன் வரையான சிறார்களுக்கு கிட்டுவதில்லையென அந்நாட்டு அரசின் கல்விச் செயற்பாடு தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை கூறுகின்றது.

அந்நாட்டு சிறார்களில் சுமார் மூன்று மில்லியன் பேர் வரையில் அவர்களின் வாழ்நாளிலேயே பள்ளிக்கூடங்களுக்குச் சென்றதில்லை.

பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 வீதமாக இருந்த அந்நாட்டு பள்ளிக்கூடங்களுக்கான நிதி ஒதுக்கீடு 2005ம் ஆண்டில் 1.5 வீதமாக குறைக்கப்பட்டது. அதாவது நாட்டின் தேசிய விமான சேவை பெறுகின்ற மானியத்தை விட இது குறைந்தளவானதே.

பணக்கார பெற்றோர்கள் தமது பிள்ளைகளை தனியார் பள்ளிக்கூடங்களுக்கும், பின்னர் வெளிநாட்டு கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்கின்ற நிலையில் மூன்றில் ஒரு பங்கு பாகிஸ்தானியர்கள் இரண்டு வருடங்களுக்கும் குறைவான காலமே பள்ளிக்கூடங்களுக்குச் சென்றுள்ளதாக ஆணைக்குழு அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

தென் மாகாணமான பலூஜிஸ்தானே கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளது.

பெண்கள் அரைவாசிப் பேருக்கே வாசிக்கத் தெரியும்

மொத்தத்தில் ஆறு வீதமான சிறார்களே மதப்பள்ளிகளிலும் மதரசாக்களிலும் கல்வி பெறும் நிலை அந்நாட்டிலுள்ளது.

பாகிஸ்தானை விடவும் ஏழ்மையான நிலையில் இன்னும் 26 நாடுகள் உள்ளன.ஆனால் அந்த நாடுகளால் அதிகமான சிறுவர்களை பள்ளிக்கு அனுப்பமுடிந்துள்ளமை இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

ஐநாவின் 2015ம்ஆண்டுக்கான மில்லேனிய கல்வி அபிவிருத்தி இலக்குகளை எட்டும் நிலையில் பாகிஸ்தான் இன்று இல்லை.

ஆனால் அண்டை நாடுகளான இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் அவற்றின் இந்த பயணத்தில் முன்னேறி வருகின்றன.

ஆனால் அரசாங்கம், கல்வித் துறைக்கான அதன் தற்போதைய நிதியை இரண்டு மடங்காக அதிகரித்தால் இரண்டு வருடங்களிலேயே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண முடியுமென அரசாங்க ஆணைக்குழுவின் இந்த அறி்கை சிபார்சு செய்துள்ளது.


செய்தி :-
BBCTAMIL

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக