24 மார்ச் 2011

லிபியா:தாக்குதல் தொடர்கிறது – இடைக்கால அரசை உருவாக்கியதாக எதிர்ப்பாளர்கள்

திரிபோலி:அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுகளின் தாக்குதல் தொடரும் வேளையில், இடைக்கால அரசை உருவாக்கியதாக ஜனநாய கரீதியாக போராட்டம் நடத்திவரும் எதிர்ப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

மஹ்மூத் ஜிப்ரீல் இடைக்கால பிரதமராக பதவி வகிப்பார். திரிபோலி தங்களது தலைநகரம் என்றும், மேற்கு நகரங்களை மீட்பதே எங்களது லட்சியம் எனவும் எதிர்ப்பாளர்களின் செய்தித் தொடர்பாளர் நிஸான் கவ்ரியானி தெரிவித்துள்ளார்.

வடக்கு லிபியாவில் எதிர்ப்பாளர்கள் மீது லிபியா ராணுவம் தீவிரமான தாக்குதலை தொடுத்து வருவதாக செய்திகள் கூறுகின்றன.

மிஸ்ரத்தா, அஜ்தாபி, சின்தான் ஆகிய நகரங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதேவேளையில், அரசு எதிர்ப்பாளர்களின் வலுவான பிரதேசமான மிஸ்ரத்தா அருகில் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் நேற்று விமானத் தாக்குதலை தொடுத்தனர்.

கத்தாஃபிக்கு ஆதரவான ராணுவம் முதலில் பின்வாங்கிய பொழுதும், ஆயுத ஏந்திய குழுக்கள் பின்னர் பதிலடிக் கொடுத்ததாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச்சூடு நேற்று மாலையிலும் தொடர்ந்தது.

இதற்கிடையே, சில வாரங்கள் இடைவேளைக்குப் பிறகு லிபியாவின் சர்வாதிகாரி முஅம்மர் கத்தாஃபி திரிபோலியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் தோன்றி உரை நிகழ்த்தினார். குறுகிய காலமோ அல்லது நீண்டகாலமோ நாடு போருக்கு தயார்.

வரலாற்றின் குப்பைக் கூடையில் தூக்கியெறியப்படவிருக்கும் பாசிச சக்திகள்தாம் லிபியாவின் மீது தாக்குதலை தொடுத்துள்ளன. இவர்களுக்கெதிராக போராட எல்லா இஸ்லாமிய ராணுவங்களும் ஒன்றுபட வேண்டும் என கத்தாஃபி தெரிவித்தார்.

லிபியாவுக்கெதிராக தடையை கடுமையாக்குவதற்காக பதினான்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

கத்தாஃபியின் அரசுக்கு அதிகமான நிதியுதவி அளிப்பது இந்த எண்ணெய் கம்பெனிகளாகும். கத்தாஃபி ஆட்சியிலிருந்து விலகும்வரை ராணுவ நடவடிக்கை தொடரும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

லிபியாவின் மக்களுக்கு சொந்தமாக தீர்மானம் எடுக்கும் வாய்ப்பும், ஆட்சியில் சீர்திருத்தங்களும் உருவாகும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே லிபியாவின் விமானப்படையை தங்களது படையினர் தோல்வியுறச் செய்ததாக பிரிட்டீஷ் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால், கூட்டணி படைகளின் விமானத் தாக்குதலுக்கு மத்தியிலும் கத்தாஃபியின் ராணுவம் எதிர்ப்பாளர்களின் மீது தாக்குதலைத் தொடுத்துவருவது, மேற்கத்திய சக்திகளின் தாக்குதலால் எவ்வித பயனுமில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.

இதனிடையே, அமெரிக்காவிற்கும், கூட்டணி நாடுகளுக்குமிடையே தாக்குதலுக்கு தலைமை ஏற்பது யார் என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தாக்குதலை வழிநடத்துவதை நேட்டோவுக்கு அளிக்க வேண்டுமென அமெரிக்கா உறுதியாக உள்ளது.

நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக