08 மார்ச் 2011

ரூ. 50 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு: ஹசன் அலி கைது!

மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய வரி ஏய்ப்பாளராக கருதப்படும் தொழிலதிபர் ஹசன் அலி கான் வீட்டில் அமலாக்க துறை (இ.டி.) அதிகாரிகள் நேற்று திடீரென சோதனை நடத்தினர். இதனையடுத்து ஹசன் அலி கான் கைது செய்யப்பட்டார். அவரிடம் மும்பையில் தீவிர விசாரணை நடக்கிறது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பழைய இரும்பு வியாபாரம் செய்தவர் ஹசன் அலி கான் (54). குறுகிய காலத்தில் கோடி கோடியாக சம்பாதித்தார். வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாமல் இருந்ததால், புனே, கோரேகாவ் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் 2007ம் ஆண்டு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, வெளிநாட்டு வங்கிகளில் 800 கோடி டாலர் கறுப்பு பணத்தை பதுக்கி இருந்தது தெரிந்தது. கணக்கில் வராத பல லட்சக்கணக்கான ரூபாய் ரொக்க பணமும் சிக்கியது. முக்கிய ஆவணங்களை வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராக வருமான வரித் துறை சம்மன் அனுப்பியது. ஆனால் கான் தலைமறைவானார்.

ஆவணங்களை பின்னர் ஆய்வு செய்த வருமான வரித் துறையினர், ‘ரூ. 50,000 கோடி வருமான வரி பாக்கி செலுத்த வேண்டும்’ என்று 2008ம் ஆண்டு கானுக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதை எதிர்த்து வருமான வரி தீர்ப்பாயத்தில் அவர் முறையீடு செய்திருக்கிறார்.

இதற்கிடையே அன்னிய செலாவணி விதிமுறைகளை மீறியதற்காக கானிடம் அமலாக்க பிரிவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்க கோரியும், கானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரியும் முன்னாள் சட்ட அமைச்சர் ராம்ஜெத்மலானியும் மற்றவர்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கில், ஹசன் அலி கானை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, மும்பையில் இருந்து அமலாக்க துறையை சேர்ந்த 2 குழுக்கள் நேற்று காலை புனே சென்று கானின் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டது. அப்போது கான் வீட்டில் இருந்தார். அவரை விசாரணைக்காக மும்பை அழைத்து வந்தனர்.


செய்தி :-  தினகரன்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக