திருவனந்தபுரம் : கேரள அரசு சமீபத்தில் அறிவித்த கிலோ ரூ.2க்கு அரிசி வழங்கும் திட்டத்திற்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. கேரளாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், மீனவர்கள் மற்றும் பாரம்பரிய தொழில் செய்பவர்களுக்கு கிலோ 2 ரூபாய்க்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதில் சுமார் 25 லட்சம் குடும்பத்தினர் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில், வறுமை கோட்டுக்கு மேல் உள்ள மேலும் 40 லட்சம் குடும்பத்தினருக்கும் ரூ.2க்கு அரிசி வழங்கப்படும் என கடந்த மாதம் கேரள அரசு அறிவித்தது.
தற்போது, இந்த 2 ரூபாய் அரிசி திட்டத்திற்கு தேர்தல் கமிஷன் நேற்றுமுன்தினம் இரவு திடீர் தடை விதித்தது. இது குறித்து கேரள தலைமை தேர்தல் அதிகாரி நளினி நெட்டோ கூறுகையில், ‘கேரள அரசு வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு 2 ரூபாய்க்கு அரிசி வழங்க கடந்த மாதம் 25ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. ஆனால், வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள குடும்பங்களை கணக்கெடுப்பதற்கான பணிகளை இதுவரை தொடங்கவில்லை.
இனிமேல் இதற்கான பணிகளை தொடங்கினால் அது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக அமையும். எனவே, இத்திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள் ளது’ என்றார்.
தேர்தல் கமிஷனின் இந்த உத்தரவு கேரள அரசுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இது குறித்து கேரள நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஐசக் கூறுகையில், ‘கேரளாவில் 2 ரூபாய்க்கு அரிசி வழங்கும் திட்டம் கடந்த ஓராண்டாக அமலில் இருக்கும் திட்டமாகும். இதை மேலும் பலருக்கு விரிவுபடுத்தப்படுத்தி யுள்ளோம். எனவே, தேர்தல் கமிஷனில் அப்பீல் செய்வோம்’ என்றார்.
செய்தி :- தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக