07 பிப்ரவரி 2011

"கலாச்சாரப் பன்முகத்தன்மை தோற்றுவிட்டது"

பிரிட்டிஷ் பிரதமர் கேமரன்
பிரிட்டிஷ் சமூகத்தில் கலாச்சார பன்முகத்தன்மையை முன்னிறுத்துவதென்கிற அரசாங்கத்தின் கொள்கை தோல்வி கண்டுவிட்டது என பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் கூறியுள்ளார்.
தவிர மேற்குலக நாடுகளில் காணப்படும் தாராளவாத விழுமியங்களை அவர் உத்வேகத்துடன் ஆதரித்துப் பேசினார்.
பாதுகாப்பு தொடர்பாக ஜெர்மனியில் ஆரம்பித்துள்ள மாநாட்டில் உரையாற்றிய கேமரன், கலாச்சார பன்முகத்தன்மையை முன்னிறுத்தப்போய் சமூகத்தில் பிளவுகள் அதிகரித்ததுதான் மிச்சம் என்று தெரிவித்துள்ளார்.
ஆட்சேபத்துக்குரிய கருத்தையோ இனத்துவேஷம் மிக்க கருத்தையோ வெள்ளையினத்தவர் ஒருவர் வெளிப்படுத்தும்போது அதை நாம் கண்டிக்கிறோம் என்பது சரி. ஆனால் அதேயளவுக்கு ஏற்கமுடியாத கருத்தையோ, நடத்தையையோ வெள்ளையர் அல்லாதவர் ஒருவர் செய்யும்போது அதனைக் கண்டிப்பதில் நாம் தயக்கம் காட்டுகிறோம், சொல்லப்போனால் பயப்படவும் செய்கிறோம்.
பிரதமர் கேமரன்
"மற்ற மதத்துக்காரர்களை வெறுக்கச் சொல்லித் தரும் மதபோதகர்கள் நமது நாடுகளுக்குள் வருவதை நாம் தடுக்க வேண்டும். தவிர உள்நாட்டு மக்கள்
மீதோ வெளிநாட்டு மக்களுக்கு எதிராகவோ பயங்கரவவாதத்தை தூண்டிவிடும் அமைப்புகளை நாம் தடைசெய்ய வேண்டும்." என்று பிரதமர் கேமரன் கேட்டுக்கொண்டார்.
ஐரோப்பாவில் செயல்படும் சில முஸ்லிம் குழுக்கள் தீவிரவாதம், கடும்போக்குவாதம் போன்றவற்றைக் எதிர்கொண்டு சமாளிக்கத் தவறியுள்ளன என்றும் அவர் கூறினார்.
முஸ்லிம் அமைப்பு விமர்சனம்:
தனது உரையில் முஸ்லிம்கள் மட்டும் தனியாகக் குறிப்பிட்டுப் பேசியுள்ளதன் மூலம் சமூகத்தில் இஸ்லாமியருக்கு எதிராக நிலவும் அனாவசிய பயத்தையும் சந்தேகத்தையும் பிரதமர் கேமரன் ஊக்குவித்துள்ளார் எனக் கூறி பிரிட்டனின் முஸ்லிம் இளைஞர் அமைப்பான ரமதான் அறக்கட்டளை விமர்சித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக