சென்னை: ஓட்டுக்களைச் சேர்ப்பதை விட மனிதர்களைச் சேர்ப்பதுதான் இன்றைக்கு முக்கியம், என்று கமல்ஹாஸன் கூறியுள்ளார்.
மேலும் பெட்ரோலைச் சேமிக்கவும், பெட்ரோல் விலையைக் குறைக்க வலியுறுத்தவும் பிப்ரவரி 14-ம் தேதி பெட்ரோல் போடாமல் இருப்போம், என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அகில இந்திய கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் புதிதாக இளைஞர் அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. இதற்கான விழாவும் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் சென்னை ஆழ்வார்பேட்டை மகாராஷ்டிரா நிவாஸ் திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்த விழாவுக்கு எல்லா மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வந்திருந்தனர்.
சிறிய மண்டபம் என்பதால் குறைவான ரசிகர்களே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். வெளியே ரசிகர்கள் நீண்ட கியூ வரிசையில் காத்து நின்றனர். திருமண மண்டபத்தின் அருகே உள்ள தனது வீட்டில் இருந்து கமல்ஹாசன் காலை 10.30 மணியளவில் அங்கு வந்து இளைஞர் அமைப்பை தொடங்கி வைத்தார்.
உடல் ஊனமுற்றவர்களுக்கு 3 சக்கர சைக்கிள்களையும், ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரங்களையும், ஒரு சிறுமிக்கு அறுவை சிகிச்சைக்கான நிதியையும் வழங்கினார். விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், "ரசிகர் மன்றம் இருக்கும்போது புதிதாக இளைஞர் அமைப்பு என்ற அமைப்பை என்ன காரணத்திற்காக தொடங்க வேண்டும் என்று கேட்கலாம்.
என்னைப் பொறுத்தவரையில், மனிதர்களை சேகரிப்பதுதான் முக்கியம். ஓட்டுக்களை சேகரிப்பது முக்கியம் அல்ல. நமது மன்றத்தின் பணிகள், செயல்கள் என்ன என்று செயல்விளக்க கூட்டங்களில் ஏற்கனவே பேசி இருக்கிறேன்.
எனவே, அதைப்பற்றி எல்லாம் இங்கு சொல்ல தேவையில்லை. ரசிகர்களை சந்திப்பதற்கான ஒரு தருணமாக இந்த நிகழ்ச்சியை கருதுகிறேன். இங்கே மண்டபத்திற்கு வெளியே ஏராளமான ரசிகர்கள் திரண்டு நிற்பதை பார்த்தேன். சாலையில் யாரும் போக்குவரத்திற்கு இடையூறாக நிற்கக்கூடாது. மற்றவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாமல் இருப்பதுதான் முதல் பணி.
பெட்ரோல் விலை உயர்வை எதிர்க்க....
பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.18- க்கு விற்கப்படுகிறது. நம் நாட்டில் பெட்ரோல் விலை 64 ரூபாய் ஆகும். பெட்ரோல் விலையை குறைக்க அரசியல் கட்சிகள் என்ன முயற்சி எடுக்கின்றன என்பதை விட நாம் என்ன செய்ய போகிறோம் என்பதுதான் முக்கியம். இதை 'சோசியல் மெசேஜ்' என்று சொல்வார்கள்.
அரசியல் அமைப்புகளை விட தனி மனிதர்களுக்கு அதிக பலம் இருக்கிறது. நாம் எல்லோரும் ஒருநாள் பெட்ரோலே போடாவிட்டால் பிரச்சினை ஓரளவுக்கு சரியாகிவிடுமே. இதற்கான நாள் பிப்ரவரி 14-ந்தேதி என்று சொல்லி இருக்கிறார்கள். அதைக் கடைப்பிடித்துதான் பார்ப்போமே... அதற்காக பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு நான் எதிரி கிடையாது. நாம் இதுபோன்ற பணிகளைச் செய்தால் போதும்.
அதற்கு மேல் போகத்தேவையில்லை. நாம் எந்த கட்சியை சார்ந்தவர்களும் கிடையாது. நம்மால் முடிந்த செயல்களை செய்ய வேண்டும். மற்றவர்களை குறை சொல்லக்கூடியவர்கள் அல்ல நாம். எதையும் பகுத்தறிந்து, பெரியவர்களின் அறிவுரையை கேட்டு நாட்டுக்கு பயன்படக்கூடிய வகையில் நடந்துகொள்ள வேண்டும்..." என்றார்.
செய்தி நன்றி:-Thtstamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக