பெங்களூர்: கலிபோர்னியாவின் டிரைவேலி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர்களுக்கு காலில் கண்காணிப்பு டேக் மாட்டி விட்டிருக்கும் அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா கடும் கண்டனமும், அதிருப்தியும் தெரிவித்துள்ளது.
இப்பல்கலைக்கழகத்தில் பெருமளவிலான மாணவர்கள் குடியேற்ற விதிமுறைகளை மீறி சேர்க்கப்பட்டிருப்பதாக அமெரிக்க குடியேற்றத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது இந்திய மாணவர்கள்தான். கிட்டத்தட்ட 1555 மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர். அவர்களில் 95 சதவீதம் பேர் இந்தியர்கள், அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மாணவர்களின் பாஸ்போர்டுகள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல மாணவர்களைக் கைது செய்து பின்னர் விடுவித்த அமெரிக்க அரசு, தற்போது அவர்களைக் கண்காணிக்கும் வகையில், காலில் ரேடியோ டேக்குகளைக் கட்டி விட்டுள்ளனர்.
இந்த செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது அமெரிக்க அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய மாணவர்கள் குற்றவாளிகள் அல்ல. உடனடியாக ரேடியோ டேக்குகளை அகற்ற வேண்டும். மாணவர்களை அதிகாரிகள் நடத்தியுள்ள முறை சற்றும் ஏற்புக்குரியதல்ல. இந்த நடவடிக்கை தவிர்க்க முடியாது என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுவதை ஏற்க முடியாது. இது ஏற்கனவே ஏமாற்றப்பட்டு காயத்துக்குள்ளாகியிருக்கும் மாணவர்களை மேலும் புண்படுத்துவதாக அமையும்.
உயர் கல்வித்துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை அமெரிக்க அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும், மனதில் கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்களுக்குத் தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார் கிருஷ்ணா.
டிரைவேலி பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவர்களை மோசடியான முறையில் அங்கு சேர்த்துள்ளனர். இதை கண்டுபிடித்த அமெரிக்க குடியேற்றத்துறை தற்போது அப்பாவி மாணவர்களைக் குறி வைத்திருப்பது இந்தியாவில் மட்டுமல்லாமல், அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையேயும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எந்தத் தவறும் செய்யாத மாணவர்களின் காலில் கண்காணிப்பு டேக்குளைக் கட்டிய செயலும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அப்பாவி மாணவர்களின் காலில் டேக்குகளை மாட்டியிருப்பது போன்ற புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது.
வாய் கிழிய மனித உரிமை, மனிதாபிமானம், அமைதி என்று நியாயம் பேசும் அமெரிக்கா உள்ளூர் கொடூர மனப்பான்மையுன் நடந்து கொண்டுள்ள செயல் இந்தியர்களை அமெரிக்கா எப்படிப்பட்ட நிலையில் வைத்திருக்கிறது என்பதையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
கண்டனம் தெரிவித்ததோடு நிற்காத இந்திய அரசு, அமெரிக்க துணைத் தூதர் டொனால்டு லூவை வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைத்து இந்தியாவின் அதிருப்தியைப் பதிவு செய்துள்ளது.
முன்னதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையில்,
பாதிக்கப்பட்டுள்ள இந்திய மாணவர்களை கண்ணியத்துடன் நடத்துமாறு அமெரிக்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளோம். அவர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பிட்ட சில மாணவர்கள் கைது செய்யப்பட்டு பின் காலில் ரேடியோ டேக் பொருத்தி, விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்க சட்டப்படி இது செய்யப்பட்டிருந்தாலும் கூட, பாதிக்கப்பட்ட மாணவர்களின் கால்களில் உள்ள டேக்குகளை அகற்ற வேண்டும்.
தங்களது நிலைமை பற்றி எடுத்துச் சொல்ல மாணவர்களை அனுமதிக்க வேண்டும். அவர்களில் இந்தியாவுக்கு வர விரும்புபவர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
கடந்த வியாழக்கிழமை பாதிக்கப்பட்ட மாணவர்கள் குழு இந்திய துணைத் தூதர் சுஷ்மிதா கங்குலி தாமஸை நேரில் சந்தித்தனர்.
இது குறித்து வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி கூறியதாவது,
பல்கலைக்கழகம் தான் குற்றம் செய்துள்ளது. மாணவர்கள் குற்றமற்றவர்கள். எனவே, அவர்களை தண்டிக்காமல் இருக்க நாங்கள் அம்மாநில அரசைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.
அங்குள்ள இந்திய துணைத் தூதர் அமெரிக்க அதிகாரிகளிடம் இது குறித்து தொடர்பு கொண்டு தான் இருக்கிறார். அறிக்கை வருவதற்காகக் காத்திருக்கிறார்கள். அறிக்கை வந்த பிறகே மாணவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்று தெரியும் என்றார்.
இக்குற்றச்சாட்டுக்களை பல்கலைக்கழக நிறுவனர் சூசன் சூ மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை. நீங்கள் எங்கள் வருமானத்தைப் பற்றி பேசுகிறீர்கள். இப்படித் தான் நாங்கள் வழக்கமாக கட்டணம் வசூலிப்போம். ஏற்கனவே நிறைய மாணவர்கள் படிக்கையில் நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தி சேர வைக்கவில்லை என்று சூசன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக