26 ஜனவரி 2011

கருப்புப் பணம் - தகவல்களை வெளியிட முடியாது பிரணாப் முகர்ஜி


போதுமான சட்ட நடைமுறைகள் இல்லாத காரணத்தால், வெளிநாட்டு வங்கிகளில் பணத்தைப் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை வெளியிட முடியாது என்று நிதியமைச்சர் பிரணாப்முகர்ஜி தெரிவித்தார்.
வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை பதுக்கியுள்ள இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டால், அரசு கவிழ்ந்துவிடும் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை பிரணாப் முகர்ஜி மறுத்தார்.
வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்துள்ளவர்கள் பட்டியலை வெளியிடுவதில் அரசு தயக்கம் காட்டுவது ஏன் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் கேள்வி எழுப்பிய நிலையில், பிரணாப் முகர்ஜி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதைப் போல, அரசு எதையும் மறைக்க முயலவில்லை என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
ஒப்பந்தம்

ஏற்கெனவே உள்ள ஒப்பந்தத்தில், வங்கி தொடர்பான தகவல்களைப் பெற முடியாது. தற்போது, 23 நாடுகளுடன் அதுதொடர்பான ஒப்பந்தத்தில் திருத்தங்களை அரசு செய்துள்ளது என்றார் பிரணாப் முகர்ஜி. மேலும் 65 நாடுகளுடன் அத்தகைய ஒப்பந்தங்களை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் மதிப்பீட்டின்படி, 500 பி்லியன் டாலர் முதல் 1400 பி்ல்லியன் டாலர் வரை இந்தியர்கள் வெளிநாடுகளில் கறுப்புப் பணம் வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தின் உண்மையான அளவு தெரியாது என்றும், எல்லாம் ஒரு உத்தேச மதிப்பீட்டின் அடிப்படையில்தான் கூறப்படுவதாகவும், இதுதொடர்பாக அமைக்கப்பட்டுளள நிபுணர் குழு முழுமையாக ஆய்வு நடத்தி அதைக் கண்டறியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், கறுப்புப் பணம் வைத்திருப்போர் தொடர்பாக அரசு பெற்றுள்ள பட்டியலை வெளியிட, சர்வதேச ஒப்பந்தம் தடையாக இருப்பதாகக் கூறினார் பிரணாப் முகர்ஜி.

``பெயர்களை வெளியிடுவதைப் பொறுத்தவரை, பிரச்சினை என்னவென்றால், ரகசியம் காக்கப்படும் என்ற நிபந்தனை அடிப்படையில் தகவல்களைப் பெற்றிருக்கிறோம். இன்று அந்தப் பெயர்களை வெளியிட்டால், நாளை மற்ற நாடுகள் நமக்கு தகவல்களைக் கொடுக்காது. சர்வதேச ஒப்பந்தத்தை நீங்கள் மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டுவார்கள்,’’ என்றார் பிரணாப் முகர்ஜி.

அதே நேரத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள், வரி ஏய்ப்பு செய்வோர் மீது வழக்குத் தொடரும் நேரத்தில் அவர்களைப் பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள வழி இருக்கிறது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஏறகெனவே, ஜெர்மனியில் உள்ள வங்கியில் பணம் வைத்துள்ள 18 இந்தியர்களின் பட்டியலை உச்சநீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்திருப்பதாக சுட்டிக்காட்டிய பிரணாப் முகர்ஜி, ஜெர்மன் நாட்டுடன் உள்ள ஒப்பந்த்தின் அடிப்படையில் அது பெறப்பட்டதாகவும், ஆனால், சுவிட்சர்லாந்து நாட்டுடன் அத்தகைய ஒப்பந்தம் நடைமுறையில் இல்லை என்றும் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு வந்துள்ள பணம் தொடர்பான தகவல்களும் அரசுக்கு வந்திருப்பதாகவும், அதுதொடர்பாக விசாரணை நடைபெறுவதாகவும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக