25 ஜனவரி 2011

'பாலஸ்தீன விட்டுக்கொடுப்பு' - தகவல் கசிவு

மத்திய கிழக்கு பேச்சுவார்த்தைகளின்போது இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனர்கள் இடையில் பரிமாறப்பட்ட இரகசிய ஆவணங்கள் நூற்றுக்கணக்கானவை ஊடகங்களில் கசியவிடப்பட்டுள்ளன.
கிழக்கு ஜெருசலேத்தில் இஸ்ரேலியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்கள் பலவற்றை இஸ்ரேலிகளிடமே தந்துவிட பாலஸ்தீனத் தலைவர்கள் தயாராக இருந்தனர் என்றும், இருக்கின்ற இஸ்ரேலிய குடியிருப்புகள் தொடருவதற்கு அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள் என்று காட்டுவதாகவும் கசிந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலஸ்தீனர்கள் தமது கொள்கையிலிருந்து இறங்கிவந்து இந்த விட்டுக்கொடுப்புகளுக்குத் தயார் என்று கூறியும், இஸ்ரேலியர்கள் இதெல்லாம் போதாது என்று சொல்லி நிராகரித்திருந்தனர் என்பதாகவும் கசிந்த தகவல்கள் காட்டுகின்றன.
இந்த ஆவணங்கள் நிஜமானவை என்னும் பட்சத்தில், பாலஸ்தீனத் தலைவர்கள் வெளியில் பேசும்போது வலிமையாக பேசுவதுபோல காட்டிக்கொண்டாலும், தனிப்பட்ட ரீதியில் பேசும்போது அவர்கள் எந்த அளவுக்கு விட்டுக்கொடுக்க தயாராக இருக்கின்றனர் என்று காட்டுவதாக இவை அமைந்துள்ளன எனலாம்.

கசிந்துள்ள தகவல்களினால் ஏற்படக்கூடிய சேதங்களை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று விளங்காமல் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனத் தலைவர்களும் ஃபதா இயக்கத்தினரும் தட்டுத்தடுமாறி வருவதாகத் தெரிகிறது.
அல்ஜஸீரா வெளியிட்டுள்ள இந்த தகவல்களை கட்டுக் கதைகள் என்று கூறி பாலஸ்தீன தலைமைப் பேச்சுவார்த்தையாளர் சயேப் எரகாத் புறந்தள்ளியுள்ளார்.

ரமல்லா நகரில் உள்ள அல்ஜஸீரா அலுவலகத்தின் முன்பு கூடி கட்சித் தொண்டர்கள் எல்லாம் ஆர்ப்பாட்டம் செய்யுங்கள் என்று அழைப்பு விடுக்கும் செய்தி ஃபதா கட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலிகளுக்காக உண்மையில் எந்த அளவுக்கு விட்டுக்கொடுப்புகளைச் செய்ய பாலஸ்தீன தலைவர்கள் முன்வந்துள்ளார்கள் என்று காட்டும் தகவல்கள் என்று கூறி வெளியிடப்பட்டுள்ள இந்த தகவல்களைக் கண்டு பாலஸ்தீன மக்கள் பலர் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலப்பரப்புகளில் யூதக் குடியிருப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்ற விவகாரம் தொடர்பில்தான் இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையில் கடைசியாக நடந்த பேச்சுவார்த்தைகள் முறிந்து போயிருந்தன.
யூதக் குடியிருப்புகள் தொடர்ந்து அமைக்கப்படுவது கட்டாயம் நின்றாக வேண்டும் என்று அப்போது பாலஸ்தீனர்கள் அடித்துச் சொல்லியிருந்தனர்.
ஆனால் இந்த இடங்களை இஸ்ரேலிகளிடம் விட்டுக் கொடுத்து விடவும், ஜெருசலேத்தில் உள்ள இஸ்லாத்தில் மிகப் புனித இடங்களாக கருதப்படும் சில இடங்கள் தொடர்பில் ஏதாவது உடன்பாட்டுக்கு வருவது பற்றிப் பேசுவதற்கும் 2008ல் பாலஸ்தீனத் தலைவர்கள் தயாராக இருந்திருந்தனர் என்று கசிந்த தகவல்கள் கூறுகின்றன.
இப்படியான விட்டுக்கொடுப்புகளை செய்வதை பாலஸ்தீன மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. தங்களுடைய தலைவர்கள் மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள் என்பதையே இப்படியான தகவல்கள் காட்டுவதாக அவர்கள் நம்புகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக