04 அக்டோபர் 2010

அயோத்தி: சமரசத் தீர்வுக்கு இந்து-முஸ்லிம் பிரதிநிதிகள் திடீர் முயற்சி-பேச்சுவார்த்தை

Mohammed Hashim Ansari and Mahant Gyan Dasஅயோத்தி: அயோத்தி நில விவகார வழக்கில் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளை தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இந்தப் பிரச்சனைக்கு சமரசத் தீர்வு காண இந்து, முஸ்லிம் அமைப்புகள் முயற்சி மேற்கொண்டுள்ளன.
இந்த நிலத்தை 3 ஆகப் பிரிப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இரு தரப்பினரும் முடிவு செய்துள்ள நிலையில் சமரசத் தீர்வுக்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த நில விவகாரத்தில் வழக்குத் தொடுத்தவர்களில் ஒருவரான முகம்மத் ஹசீம் அன்சாரி, இந்து அமைப்பைச் சேர்ந்த மகந்த் ஞானி தாஸை சந்தித்துப் பேசினார். சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தில் உள்ள அனுமன் கோயிலில் இந்தச் சந்திப்பு நடந்தது.

இது இந்க விவகாரத்தில் முக்கிய திருப்பமாகும். அகில பாரதீய அகாரா பரிஷத்தின் தலைவராக உள்ள மகந்த் ஞானி தாசும் அன்சாரியுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்த விவரத்தை தெரிவிக்க மறுத்துவிட்டார்.

சன்னி முஸ்லீம் வக்பு வாரியம் கேட்டுக் கொண்டதால் தான் மகந்த் ஞானி தஸை சந்தித்துப் பேசியதாகவும், இந்தப் பிரச்சனைக்கு சுமுகத் தீர்வு காண்பது குறித்து இருவரும் பேசியதாகவும், அயோத்தி பிரச்சனை பேசித் தீர்த்துக் கொள்வதற்கான தருணம் வந்துள்ளதாகவும் அன்சாரி கூறினார்.

இந்த நிலத்தை முஸ்லீம்களுக்கு உரிமை கோரி 1961ம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்தவர் அன்சாரி என்பதும், அன்று முதல் தொடர்ந்து அவர் சட்டப் போராட்டம் நடத்தி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே போல இந்தப் பிரச்சனைக்கு சுமுகத் தீர்வு காண நிர்மோஹி அகாராவும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.

ஆனால், இந்தப் பேச்சுவார்த்தை குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்று சன்னி முஸ்லீம் வக்ப் வாரியத்தின் வழக்கறிஞர் சபர்யாப் ஜிலானி கூறியுள்ளார்.

இது குறித்து வக்பு வாரிய தலைவர் பாரூக்கிடம் பேசியதாகவும், சமரசப் பேச்சு நடத்துமாறு யாரையும் கேட்டுக்கொள்ளவில்லை என்று அவர் கூறியதாகவும் ஜிலானி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக