லண்டன்,அக்.17:உலக மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய இன்னொரு பூமி தேவைப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இத்தகைய சூழ்நிலை இன்னும் 20 ஆண்டுகளுக்குள் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.பூமியில் உள்ள வளங்களை மிகவும் அதிக அளவில் மனிதர்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் என்று வாழும் பூமி குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இயற்கை வளங்களின் நுகர்வு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் பூமியின் வளம் பாதியாகக் குறைந்துவிட்டது.
தற்போதைய நிலை தொடருமானால் 2030-ம் ஆண்டிற்குள் மேலும் ஒரு பூமி மனிதனுக்குத் தேவைப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. வெப்ப மண்டல நாடுகளில் வன விலங்குகளின் வாழ்க்கைச் சூழல் கேள்விக்குறியாகியுள்ளது. இவற்றின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் 60 சதவீதமாகக் குறைந்துவிட்டது.
புவியில் உள்ள வளங்களில் மிக அதிகமான அளவில் பிரிட்டன் மக்கள் பயன்படுத்துவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல அனைவரும் பயன்படுத்தத் தொடங்கினால் புவியில் உள்ள மக்கள் தொகைக்கு மேலும் ஒரு பூமி தேவைப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
புவியில் உள்ள வளங்களைப் பயன்படுத்தும் அளவு மற்றும் கரியமில வாயு வெளியிடும் அளவு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்து பார்க்கும்போது பிரிட்டன் 31-வது இடத்தில் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக